ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்கான காரணத்தை மறைக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முயற்சிப்பதாக மத்திய அரசு மீது குற்றம் சாட்டினார்.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நடந்த கோர ரயில் விபத்தில் உயிரிழந்த அல்லது காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு உறவினர்களுக்கு காசோலைகள் மற்றும் நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்ச்சியை மேற்கு வங்க அரசு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ரயில் விபத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 103 பேர் உயிரிழந்ததாகவும், அவர்களில் 86 பேரை இதுவரை அடையாளம் காண முடிந்துள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் “ ஜூன் 2 அன்று நடந்த மூன்று ரயில் விபத்து குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணையில் ஈடுபட்டுள்ளது, ஆனால் 2019 ஆம் ஆண்டு புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு செய்யப்பட்ட ஆதாரங்கள் ஏற்கனவே அகற்றப்பட்டுள்ளன. இதையெல்லாம் சொல்லக்கூடாது என்று நினைத்தேன். ஆனால் சூழ்நிலை என்னை நிர்பதித்துள்ளது.. 20ம் நூற்றாண்டின் மிகப்பெரிய விபத்து இது. ஆனால், விபத்துக்கான காரணத்தை மறைக்க முயற்சி நடக்குது. உண்மையை அறிய, சிபிஐ என்ன செய்யும்? இது ஒரு கிரிமினல் வழக்கு அல்ல.
நீங்கள் புல்வாமா வழக்கைப் பார்க்கவில்லையா? அப்போதைய காஷ்மீர் ஆளுநர் என்ன சொன்னார்? உண்மையான காரணத்தை மறைக்க, அனைத்தும் அழிக்கப்பட்டன, எந்த ஆதாரமும் இல்லை. உண்மை வெளிவர வேண்டும், என்று அவர் கூறினார்.
"ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்கு பதிலாக, கொல்கத்தாவில் உள்ள 14-15 நகராட்சிகளுக்கு, நகர்ப்புற வளர்ச்சிக்கு (துறை அலுவலகங்கள்) சிபிஐ அதிகாரிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. அவர்கள் எல்லா இடங்களிலும் நுழைகிறார்கள். அவர்கள் இப்போது மக்களின் குளியலறையில் நுழைவார்களா? நீங்கள் இதை எல்லாம் செய்வதன் மூலம், விபத்துக்கான உண்மையான காரணத்தை உங்களால் (மத்திய அரசு) மறைக்க முடியாது. விபத்துக்கு காரணமானவர்களை முன்மாதிரியாக தண்டிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ஜூன் 2 ஆம் தேதி கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை விபத்துக்குள்ளானது. பஹானகா பஜார் நிலையத்தில் நின்று கொண்டிருந்த இரும்பு தாது ஏற்றப்பட்ட சரக்கு ரயில் மீது சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதி தடம் புரண்டது. அப்போது எதிர் திசையில் வந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மீது கோரமண்டல் ரயில் தடம் புரண்ட சில பெட்டிகள் மோதி விபத்துக்குள்ளானது. கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்தாக இது கருதப்படுகிறது. இந்த ரயில்வே விபத்தில் 1100 பேர் காயமடைந்தனர், 288 பேர் உயிரிழந்தனர்.