
முத்தலாக் மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சி அறிவித்துள்ளது.
இஸ்லாமியர்கள் மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்றால் 3 முறை ‘தலாக்’ கூறினால் போதும். அவர்களுக்குள் விவாகரத்து ஆகிவிட்டதாக அர்த்தம். இந்த வழக்கம் தற்போதும் நடைமுறையில் உள்ளது.
இதை எதிர்த்து முஸ்லிம் சமுகத்தை சேர்ந்த பெண்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் முத்தலாக் நடைமுறை அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனவும் இதற்கு தடை விதிக்கும் பொருட்டு சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
அதன்படி நாடாளுமன்ற மக்களவையில் முத்தலாக் சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.
இந்த மத்திய அரசின் முத்தலாக் சட்டத்திற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதைதொடர்ந்து குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்நிலையில், எதிர்கட்சிகளின் குரல்களை நிராகரித்து மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து கொச்சியில் பேசிய அக்கட்சி தலைவர் குஞ்ஞாலி குட்டி குடும்ப பிரச்சனையை கிரிமினல் குற்றமாக மாற்றுவது முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது என குற்றம்சாட்டினார்.
முத்தலாக் குற்றம் புரிந்த முஸ்லீம் ஆண்களை 3 ஆண்டுகள் சிறையில் அடைத்தால் அவரது மனைவி, குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆவது என்றும் முத்தலாக் மசோதாவில் பல்வேறு முக்கிய அம்சங்கள் விடுப்பட்டிருப்பதாகவும், அடிப்படைக் கேள்விகள் பலவற்றிற்கு மசோதாவில் பதிலில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
முத்தலாக் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறினால் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அகில இந்திய முஸ்லீம் லீக் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்படும் என தெரிவித்தார்.