
நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை யாராவது மாற்ற நினைத்தால், நாங்கள் அவரை மாற்றிவிடுவோம் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கருத்து தெரிவித்துள்ளார்.
ஆனந்த குமார் கருத்து
மஹாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் ஞாயிற்றுக்கிழமை மத்திய சமூகநலத்துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நிருபர்களுக்கு ேபட்டி அளித்தார்.
அப்போது அவரிடம், சமீபத்தில் மத்திய அமைச்சர் ஆனந்த குமார் ஹெக்டே கூறிய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவோம் என்று கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில் கூறியதாவது-
அவரை மாற்றுவோம்
அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவது என்பது சாத்தியமில்லாதது. அதுபோன்ற எந்த நிகழ்வையும் நான் இருக்கும்வரை நடக்காது. அப்படி யாராவது அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைத்தால், நாங்கள் அவரை மாற்றிவிடுவோம்.
அரசியலமைப்புச் சட்டத்தை பிரதமர் மோடி புனிதமாகக் கருதுகிறார். இதுபோன்ற சர்ச்சைக் கருத்துக்களைக் கூறிய அமைச்சர் ஹெக்டே மீது பா.ஜனதா கட்சி நடவடிக்கை எடுக்கும்.
பாதுகாக்கப்படும்
மத்திய அரசு தலித்மக்களுக்கான இட ஒதுக்கீட்டை நீக்கப்போகிறது என்ற செய்தி தவறானது. அதை நம்பாதீர்கள். மத்திய அரசில் நான் அமைச்சராக இருக்கும் வரை தலித்களின் உரிமை பாதுகாக்கப்படும்.
குஜராத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஆர்.பி.ஐ. கட்சி ஆதரவு அளித்தது, அதனால், தான் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க முடிந்தது. தலித் மக்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவாக இல்லை. ஆனால், இப்போது, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைக்காக இப்போது ஆதரவு அளிக்கிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.