
ஓகி புயலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கோவளம் உள்ளிட்ட கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களை கைவிட கேரள அரசு அரசு முடிவு செய்துள்ளது.
மீனவர்கள் மரணம்
குமரி மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி ஓகி புயல் வீசியபோது கேரளாவிலும் பலத்த பாதிப்பு ஏற்பட்டது.
கேரளாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் புயலில் சிக்கி மாயமானார்கள். இதுவரை 75-க்கும் மேற்பட்டோர் பிணமாக மீட்கப்பட்டனர். இன்னும் பலரது கதி என்ன வென்று தெரியவில்லை.
இதனால் கேரள கடலோர கிராமங்கள் சோகத்தில் மூழ்கி கிடக்கிறது. பல கிராமங்களில் தொடர்ந்து அழுகுரல் கேட்ட வண்ணம் உள்ளது. ஓகி புயல் காரணமாக கேரள கடற்கரை கிராமங்களில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை இழந்து காணப்பட்டது. புத்தாண்டை வரவேற்கவும் மக்கள் தயாராக வில்லை.
கொண்டாட்டம் ரத்து
வழக்கமாக கேரளாவின் பிரசித்திப் பெற்ற கோவளம் கடற்கரையில் சுற்றுலாத்துறை சார்பில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உற்சாகமாக நடக்கும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலர் இங்கு தங்கியிருந்து புத்தாண்டை கொண்டாடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களை கேரள சுற்றுலாத்துறை ரத்து செய்துள்ளது.
இது தொடர்பாக கேரள அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஓகி புயலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கோவளம் உள்ளிட்ட கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களை கைவிட மாநில அரசு முடிவு செய்துள்ளது. கோவளம் கடற்கரையில் ஆயிரம் அகல்விளக்குகளும், ஆயிரம் மெழுகுவர்த்திகளும் ஏற்றி, அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் சுற்றுலாத்துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கலந்து கொள்வார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.