
சென்னை, மும்பை, ஐதராபாத் விமான நிலையங்களில் இருந்து விமானத்தை கடத்த சிலர் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
23 பேர் கொண்ட ஒரு கும்பல் இந்த 3 விமானநிலையங்களில் இருந்து விமானத்தை கடத்த திட்டமிட்டு இருப்பதாக மும்பை போலீசாருக்கு ஒரு பெண் மின்-அஞ்சல் அனுப்பி இருந்தார்.
மின்அஞ்சல்
அந்த மின் அஞ்சலில், அந்த பெண் கூறுகையில், “ 6 ஆண்கள் கொண்ட ஒரு கும்பல் சென்னை, ஐதராபாத், மும்பை நிலையங்களில் இருந்து விமானத்தை ஒரே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை கடத்த திட்டமிட்டு அது குறித்து பேசிக்கொண்டு இருப்பதை தான் கேட்டதாகவும், இந்த செயலில் ஒட்டுமொத்தமாக 23 பேர் ஈடுபட்டு இருப்பதாக’’ அதில் குறிப்பிட்டு இருந்தார்.
தீவிரப்பாதுகாப்பு
இதையடுத்து மும்பை போலீசார் அந்த மின் அஞ்சலை அனைத்து பாதுகாப்பு அமைப்புகளுக்கும், உளவுத்துறை அமைப்புகளுக்கும் அனுப்பினர்.
இதையடுத்து, விமானப் பாதுகாப்பு ஒத்துழைப்பு குழு உடனடியாக ஆலோசனை நடத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியது. பயணிகளிடம் தீவிரமாக சோதனை செய்வதும், விமானம் புறப்படும் கடைசி நிமிடத்தில் பயணிகள் வருவதை தவிர்க்குமாறு கூற முடிவு செய்யப்பட்டது.
சோதனை
விமானநிலையங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு பயணிகள் உடமைகள் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.
கண்காணிப்பு
இது குறித்து மத்திய தொழிற் பாதுகாப்பு படையின் இயக்குநர் ஓ.பி. சிங் கூறுகையில், “ சென்னை, மும்பை, ஐதராபாத் விமானநிலையங்களில் இருந்து விமானத்தை கடத்த திட்டமிட்டு இருப்பதாக கிடைத்த செய்தி உண்மைதான். இதையடுத்து, இந்த குறிப்பிட்ட விமானநிலையங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு, கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மோப்ப நாய்கள்
தீவிரவாதிகளின் சதித்திட்டத்தை முறியடிக்கும் வகையில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் தீவிரப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.பயணிகள் உடமைகள் தீவிரமாக ஆய்வு செய்யப்படுகிறது, விமானநிலையத்துக்குள் வரும்போது சோதனை, மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுனர்களும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.
இதற்கிடையே மற்றொரு அதிகாரி ஒருவர் கூறுகையில், “ விமானநிலையத்துக்கு வரும் பயணிகள் அச்சமடைய வேண்டாம். பயணிகளுக்கு எந்த விதமான சிரமும் இல்லாமல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது’’ என்றார்.