
காஷ்மீர் பாரமுல்லா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை, ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். அப்போது, அங்கு சீன கொடிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
காஷ்மீர் பாரமுல்லா பகுதியில் உள்ள பழமையான நகரங்களில் நேற்று முன்தினம் ராணுவம், போலீஸ், எல்லை பாதுகாப்பு படை, மத்திய ஆயுதப்படை போலீசார் ஆகியோர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
சுமார் 700 வீடுகளில் அவர்கள் 12 மணி நேரம் சோதனை நடத்தினார்கள். அப்போது பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 44 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் பதுங்கி இருந்த வீடுகளில் சோதனை செய்தபோது, சீனா மற்றும் பாகிஸ்தான் கொடிகள், பெட்ரோல் குண்டுகள், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது இயக்க லெட்டர் பேடுகள், அங்கீகாரமற்ற செல்போன்கள், தேசவிரோத நோட்டீசுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுங்கும் இடத்தில் சீன கொடிகள் கைப்பற்றப்படுவது இதுவே முதல்முறையாகும். அந்த பகுதியில் இருந்த ஏராளமான பதுங்குகுழிகளும் அழிக்கப்பட்டன.