
விற்பனைக்கான கமிஷன் தொகையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி நிர்ணயிக்க வலியுறுத்தி, பெட்ரோல் பங்க்களில் விற்பனை நிறுத்தப் போராட்டம் நாடு முழுவதும் இன்று நடைபெறவுள்ளது.
இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள், டீலர்களுக்கான விற்பனை விளிம்பு தொகையை உயர்த்தி வழங்காததைக் கண்டித்து, இந்த போராட்டத்தை பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
அதன்படி, இன்றும், வரும் 26ஆம் தேதியும் மாலை 7 மணியிலிருந்து 7.15 வரை பெட்ரோல் பங்குகளில் விளக்குகள் அணைக்கப்பட்டு, விற்பனை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 3, 4ஆம் தேதிகளில் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் நிறுத்தப்படவுள்ளது.
மேலும், கோரிக்கை நிறைவேற்றப்படாத வரை மாதத்தின் 2 மற்றும் 4வது சனிக்கிழமைகளில் பெட்ரோலிய பொருட்களின் விற்பனை நிறுத்தப்படுவதுடன், நவம்பர் 5ம் தேதி முதல் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே விற்பனை நிலையங்கள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை பெட்ரோலியப் பொருட்கள் விற்பனை செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.