
கோயில் அர்ச்சகரை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு ரூ.4 லட்சம் உதவித் தொலை வழங்கப்படும் என்று கூறியிருக்கிறது தெலங்கானா அரசு. வரும் 2017 நவம்பர் மாதம் முதல் இந்தப் புதிய திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
காலம் இப்போது மாறிவிட்டது. முன்பு போல் ஆண்களின் நடத்தை, பழக்க வழக்கம், குடும்ப பாரம்பரியம், சொந்த பந்தங்கள் என்றெல்லாம் பார்த்து, தங்கள் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதில்லை பெண்ணின் பெற்றோர். இப்போது காலம் மாறிவிட்டது. நுகர்வுக் கலாசாரம் கோலோச்சும் காலத்தில், முக்கியத் தேவை பணம் தான். எனவே, நன்கு சம்பாதிக்கும் திறன் உள்ள ஆண், மென்பொருள் பணி, பொறியாளர்கள், ஆடிட்டர்கள், டாக்டர்கள் என ப்ரொபஷனல் வரன்களைத் தேடி, திருமணம் செய்து கொடுக்கிறார்கள் பெண்ணின் பெற்றோர். பொதுவாகவே வருமானம் குறைவான ஆண் என்றால், அவர்களுக்கு திருமணத்துக்கான பெண்கள் கிடைப்பது அபூர்வம்தான்.
இத்தகைய காலச் சூழலில், கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் வகுப்பைச் சேர்ந்த ஆண்களுக்கு பெண்கள் அமைவது குதிரைக் கொம்பாகவே இருந்து வருகிறது. குறைந்த அளவு ஊதியம் என்பதால், அவர்களை திருமணம் செய்து கொள்ள பெண்கள் தயாராக இல்லை. இதனால், ஆண்கள் பெரும்பாலோர் தகுந்த பெண் கிடைக்காமல் பிரமசாரிகளாகவே காலம் தள்ள வேண்டியுள்ளது. வயது அதிகம் ஆகியும் குடும்பம் நடத்த பெண்கள் கிடைக்காததால், கோயில்களில் அர்ச்சகர் என்ற வகுப்பே இல்லாமல் போய்விடும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகக் கருதிய தெலங்கானா மாநில அரசு, இந்தச் சிக்கலைப் போக்க எடுத்த முடிவுதான், திருமண உதவித் திட்டம். இந்தத் திட்டத்திற்கு தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் சூட்டியுள்ள பெயர் ‘கல்யாணமஸ்து’ என்பதுதான்
இந்தத் திட்டம் குறித்து, தெலங்கானா மாநில பிராமண நல வாரிய தலைவரும், முதல்வரின் ஆலோசகருமான ரமணாச்சாரி கூறியபோது...
பிராமண வகுப்பைச் சேர்ந்த கோவில் அர்ச்சகர்களை திருமணம் செய்ய விரும்பும் பெண்களுக்கு திருமணத்துக்கு முன்பே செலவுக்காக ரூ.1 லட்சம் வழங்கப்படும். திருமணம் முடிந்ததும், புதுமணத் தம்பதி பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மணமகனும் மணமகளும் இணைந்த வங்கிக் கணக்கில் ரூ.3 லட்சம் டெபாசிட் செய்யப்படும். இந்தப் பணத்தை அவர்கள் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியுடன் எடுத்துக் கொள்ளலாம். இந்தத் திட்டம் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைவருக்கும் நிதி உதவி வழங்கப்படும் எனக் கூறினார்.
இந்தத் திட்டத்தின் கீழ் உதவி பெற தம்பதியரின் எண்ணிக்கையில் வரம்பு இல்லை. திருமணத்திற்கு தகுதி வாய்ந்த ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் திருமண ஊக்கத்தொகை வழங்கப்படும். சம்பள வரன்முறைப்படுத்தல் மூலம், கோவில் அர்ச்சகர்களும் சமுதாயத்தில் மரியாதைக்குரிய நபர்களாக இடம் பெறுவார்கள். தெலங்கானாவில் 4,805 கோவில்களின் அர்ச்சகர்கள் நவம்பர் முதல் அரசு ஊதியம் பெறும் வகையில் சம்பள விகிதங்கள் அறிவிக்கப்படும் என்று முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தெரிவித்திருந்தார்.