வங்கிக் கணக்கோட ஆதார கட்டாயம் இணைக்கணும்னு நாங்க சொல்லலியே! ரிசர்வ் வங்கி அளித்த அதிர்ச்சி..!

First Published Oct 20, 2017, 12:55 PM IST
Highlights
RBI says linking bank account with Aadhaar not mandatory Report


வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் எல்லாம் தங்களோட ஆதார் எண்ணை வங்கிக் கணக்கோட கட்டாயம் இணைக்கணும்னு நாங்க ஒண்ணும் சொல்லவே இல்ல... - இப்படி அதிர்ச்சி கொடுத்திருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி. 

தில்லியை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பொருளாதார முதலீட்டு ஆலோசனை இணையதளம் மணிலைஃப்.காம். இந்த இணையதளத்தின் சார்பில், யோகேஷ் சப்க்லே என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி ஒரு கேள்வியை ரிசர்வ் வங்கிக்குக் கேட்டு மனு அனுப்பினார். அதற்கு ரிசர்வ் வங்கி அனுபியுள்ள பதில்தான், இத்தகைய அதிர்ச்சியை அவருக்கு மட்டுமல்ல... பலருக்கும் ஏற்படுத்தியிருக்கிறது. 

மத்திய அரசின் உதவித் திட்டங்கள்படி நிதி உதவிகளைப் பெற ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். இது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு, நடைமுறைப் படுத்த உத்தரவிடப்பட்டது. மேலும் பெரும்பாலான திட்டங்களுக்கான நிதி வங்கிகள் மூலமாகவே வழங்கப்படுகின்றன. இதனால், வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதனை நினைவூட்டும் எஸ்.எம்.எஸ்.கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப் பட்டு வருகின்றன. இதற்கு டிசம்பர் 31 ஆம் தேதி இறுதி என்று ஒரு காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டது. இந்தக் காலக் கெடுவுக்குள் இதனைச் செய்யாவிட்டால், வங்கிக் கணக்குகள் செயலிழந்து விடும் என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டதால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். 
 
இந்நிலையில்தான், மத்திய ரிசர்வ் வங்கிக்கு தகவல் கேட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி அனுப்பப் பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி  அனுப்பியுள்ள பதிலில், வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று ஆணை எதுவும் தாங்கள் பிறப்பிக்கவில்லை என்றும் அது மத்திய அரசின் அறிவிப்பு என்றும் கூறியுள்ளது. 

அந்த பதிலில் கூறப்பட்டுள்ள தகவல்: பண மோசடியைத் தடுக்க, வங்கிகள் உரிய ஆவணங்களை பராமரிக்க, மத்திய அரசு 1.6.2017 அன்று GSR 538(E) ஒரு  அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டது. அதில், வங்கிகளில் புதிய கணக்கு துவக்க விரும்புபவர்களும், தற்போது கணக்கு உள்ளவர்களும் தங்களது ஆதார் எண், பான் கார்டு  எண் இரண்டையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆணை மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி இது தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

ரிசர்வ் வங்கியின் இந்த தகவலின் படி, இது மத்திய அரசின் உத்தரவு என்பதை தெளிவாக்கியுள்ளது. மத்திய அரசு தன் ஆறு திட்டங்களுக்கு மட்டுமே ஆதார் எண்னை இணைக்க வலியுறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால்,  அரசின் ஐம்பதுக்கும் மேலான திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் என்று அரசு வற்புறுத்தியுள்ளது.  ஆதார் சட்டப் பிரிவு 7ன் படி, மத்திய அரசின் நிதி உதவிகளைப் பெற மட்டுமே ஆதார் எண் தேவை என்கிறது உச்ச நீதிமன்றம். ஆனால் வங்கியில் வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த பணத்தை பயன்படுத்துவதற்கும் கூட ஆதார் எண் கேட்கப்படுவதாக புகார் தெரிவித்து வருகின்றனர். 

click me!