
பொதுவாக மரணம் என்றாலே பலருக்கும் ஒருவித அச்சம் இருக்கும். ஆனால், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர், தனது இறுதிப் பயணத்தை மிகுந்த அமைதியுடனும், முன்கூட்டியே திட்டமிட்டும் எதிர்கொண்டு வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஜக்டியால் மாவட்டம், லக்ஷ்மிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நக்கா இந்திரய்யா (80). இவர் தனது மரணத்திற்குப் பிறகு தன்னை அடக்கம் செய்வதற்காக, வாழும்போதே தனக்கென ஒரு பிரம்மாண்ட சமாதியைக் கட்டியுள்ளார்.
சுமார் 12 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்தச் சமாதி, ஐந்து அடி ஆழமும், ஆறு அடிக்கு மேல் நீளமும் கொண்டது. இது முழுமையாக உயர்தர கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. சிதைந்து போகாமல் இருப்பதற்காக, இந்த வடிவமைப்பைச் செய்ய தமிழ்நாட்டிலிருந்து கொத்தனார் ஒருவரை வரவழைத்து இதனை உருவாக்கியுள்ளார் இந்திரய்யா.
தனது மறைந்த மனைவியின் கல்லறைக்கு அருகிலேயே இந்தச் சமாதியை அவர் அமைத்துள்ளார். இப்போது இந்திரய்யாவின் தினசரி வாழ்க்கை இந்த இடத்தைச் சுற்றியே நகர்கிறது.
தினமும் காலை சமாதிக்குச் சென்று அதன் கிரானைட் தளத்தைச் சுத்தம் செய்கிறார். சமாதியைச் சுற்றித் தான் நட்டுள்ள செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுகிறார்.
பிறகு, தனது "எதிர்கால இல்லம்" என்று அவர் அழைக்கும் அந்தச் சமாதிக்கு அருகிலேயே அமைதியாக அமர்ந்து நேரத்தைச் செலவிடுகிறார்.
"இது நானே எனக்காக வெட்டிய வீடு. நான் இறந்த பிறகு இங்கேதான் ஓய்வெடுப்பேன். அதனால் எனக்குப் பிடித்தது போல இதை அமைத்துக் கொண்டேன்," என்கிறார் இந்திரய்யா.
இந்திரய்யாவின் வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்தது. 10 வயதிலேயே தந்தையை இழந்த அவர், கூலி வேலை செய்து முன்னேறினார். பின்னர் துபாயில் 45 ஆண்டுகள் கட்டுமானத் துறையில் பணியாற்றிச் சேர்த்த பணத்தைக் கொண்டு இப்போது வாழ்ந்து வருகிறார்.
இவருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தபோதிலும், தனது இறுதிக்காலச் சடங்குகளுக்காக யாரிடமும் கையேந்தவோ அல்லது யாருக்கும் சுமையாகவோ இருக்க அவர் விரும்பவில்லை.
"யாருக்கும் பாரமாக இருக்க நான் விரும்பவில்லை. மரணத்திற்குப் பயப்படத் தேவையில்லை. ஒருநாள் எல்லோரும் இறக்கத்தான் போகிறோம். எனக்கும் அந்த நாள் வரும். அப்போது நான் எங்கே புதைக்கப்படுவேன் என்பது இப்போதே எனக்குத் தெரியும். அது எனக்கு நிம்மதியைத் தருகிறது," என்று அவர் கூறுகிறார்.
இந்தச் சமாதியின் மேல்புறம் ஒரு பெரிய கிரானைட் கல்லால் மூடப்பட்டுள்ளது. அவர் இறந்த பிறகு, ஒரு கடப்பாரை மூலம் அந்தக் கல்லை அகற்றி, அவரை அடக்கம் செய்துவிட்டு மீண்டும் மூடிவிடும் வகையில் எளிமையாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.