
இந்திய ரயில்வேயின் மிக முக்கியமான மைல்கல்லாக, நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் (Vande Bharat Sleeper) ரயில் சேவை குவஹாத்தி மற்றும் கொல்கத்தா இடையே தொடங்கப்பட உள்ளது. இந்தத் தகவலை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வியாழக்கிழமை உறுதிப்படுத்தினார்.
ரயில்வே அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலுக்கான அனைத்துச் சோதனைகளும் சான்றிதழ் வழங்கும் பணிகளும் வெற்றிகரமாக முடிந்துவிட்டன. இதன்படி, குவஹாத்தி – கொல்கத்தா வழித்தடத்தில் முதல் ரயில் இயக்கப்பட உள்ளது. இன்னும் சில நாட்களில் பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி இந்தச் சேவையைத் தொடங்கி வைப்பார்," என்று தெரிவித்தார்.
தற்போது இயங்கி வரும் வந்தே பாரத் ரயில்கள் இருக்கை வசதி (Chair Car) கொண்டவை. ஆனால், புதிய ஸ்லீப்பர் ரயில்கள் இரவு நேரப் பயணிகளுக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இது வணிகர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமானக் கட்டணத்தைக் காட்டிலும் மக்கள் எளிதில் அணுகும் வகையில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
• 3-அடுக்கு ஏசி (3AC): சுமார் ₹2,300
• 2-அடுக்கு ஏசி (2AC): சுமார் ₹3,000
• முதல் வகுப்பு ஏசி (1st AC): சுமார் ₹3,600
இந்த ரயில் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் சோதிக்கப்பட்டது, ஆனால் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது மணிக்கு 160 கி.மீ வேகத்தில் இயக்கப்படும்.
• பெட்டிகளின் அமைப்பு: மொத்தம் 16 பெட்டிகள் (11 பெட்டிகள் 3AC, 4 பெட்டிகள் 2AC, 1 பெட்டி முதல் வகுப்பு ஏசி).
• மொத்த இருக்கைகள்: 823 பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்கலாம்.
• அதிநவீன வசதிகள்: தானியங்கி கதவுகள், மேம்படுத்தப்பட்ட குஷன்கள் கொண்ட படுக்கைகள் மற்றும் சத்தம் குறைவாக இருக்கும் தொழில்நுட்பம்.
• பாதுகாப்பு: ரயில்கள் மோதுவதைத் தவிர்க்கும் 'கவாச்' (Kavach) தொழில்நுட்பம் மற்றும் அவசர காலத்தில் ஓட்டுநரைத் தொடர்பு கொள்ளும் வசதி.
• சுற்றுச்சூழல்: கிருமிநாசினி தொழில்நுட்பம் மற்றும் விமானங்களில் இருப்பதைப் போன்ற பயோ-வேக்குவம் கழிப்பறைகள்.
குவஹாத்தியில் இருந்து புறப்படும் பயணிகளுக்கு அஸ்ஸாம் உணவு வகைகளும், கொல்கத்தாவில் இருந்து புறப்படும் பயணிகளுக்கு வங்காள உணவு வகைகளும் வழங்கப்படும் என்பது கூடுதல் சிறப்பு.