
மொழி, சாதி மற்றும் செல்வ நிலைகளைக் கடந்து மக்கள் அனைவரும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் (RSS) தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுமே தேசிய மொழிகள் தான் என்றும், மக்கள் தங்கள் வீடுகளில் தாய்மொழியில் பேச வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற 'இந்து சம்மேளனம்' நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்துப் பல முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
"இந்தியாவின் அனைத்து மொழிகளுமே தேசிய மொழிகள்தான். அவை அனைத்தும் சமமான முக்கியத்துவம் கொண்டவை. எனவே, குறைந்தபட்சம் நமது வீடுகளுக்குள்ளாவது நாம் நமது தாய்மொழியில் பேச வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டார்.
ஒருவர் தனது சொந்த மாநிலத்தைத் தாண்டி வேறு மாநிலத்திலோ அல்லது பிராந்தியத்திலோ வசிக்க நேர்ந்தால், அந்தப் பகுதியின் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
சாதி, மொழி மற்றும் பொருளாதார அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் பிரிந்து கிடக்கக் கூடாது. ஒட்டுமொத்த நாடும் அனைவருக்கும் சொந்தமானது என்ற உணர்வே இந்தியாவின் அடையாளம் என்று அவர் பேசினார்.
மத்திய அரசு இந்தி மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகத் தென்னிந்திய மாநிலங்களில் எதிர்ப்பு நிலவுகிறது. டேராடூனில் திரிபுரா மாநில மாணவர் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையிலும், மோகன் பகவத்தின் பேச்சு கவனம் பெற்றுள்ளது.
மோகன் பகவத்தின் இந்த உரையை பாஜக தலைவர்கள் வரவேற்றுள்ளனர். "இந்திய கலாச்சாரத்தின்படி அனைவரையும் உள்ளடக்கிய ஒரு செய்தியை அவர் சொல்லியிருக்கிறார்" என உத்தரப் பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், எதிர்க்கட்சிகள் இதைக் கடுமையாக விமர்சித்துள்ளன. ஆர்.ஜே.டி (RJD) எம்பி மனோஜ் ஜா கூறுகையில், "திரிபுரா மாணவர் கொல்லப்பட்டபோது அமைதியாக இருந்த மோகன் பகவத், இப்போது சமூக நல்லிணக்கம் பற்றிப் பேசுகிறார்" என்று குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் தலைவர் ரஷீத் ஆல்வி, "தென்னிந்திய மக்கள் மீது இந்தியைத் திணிப்பதை நிறுத்துமாறு தனது பாஜக நண்பர்களுக்கு மோகன் பகவத் முதலில் சொல்லட்டும்" என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.