
இருமல் சிரப் மருந்துகளின் மற்றும் உற்பத்தியில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மருந்து விதிகளில் உள்ள ஷெட்யூல் கே பட்டியலிலிருந்து சிரப் வகை மருந்துகளை நீக்குவதற்கான அறிவிப்பை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மற்றும் தொடர்புடையவர்கள் 30 நாட்களுக்குள் கருத்துக்களை தெரிவிக்கலாம். இந்த மாற்றம் அமலுக்கு வந்தால், மாத்திரைகள் போல எளிதில் சிரப் மருந்துகளை விற்க முடியாது.
இந்த புதிய விதிகளின்படி, இருமல் சிரப் தயாரிப்பில் கடுமையான உற்பத்தி நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். மூலப்பொருட்களின் தரம் முதல் தயாரிப்பு வரை ஒவ்வொரு கட்டமும் கண்காணிக்கப்படும். இந்த நடவடிக்கை, மத்தியப் பிரதேசத்தில் நச்சுத்தன்மை கொண்ட இருமல் மருந்தை உட்கொண்ட 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. அந்த மருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த போலி நிறுவனம் தயாரித்தது என விசாரணையில் தெரியவந்தது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனைகள், அந்த இருமல் மருந்தில் டைஎதிலீன் கிளைக்கால் அதிக நச்சுத்தன்மை கொண்ட ரசாயனம் கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னை தலைமையகமாக கொண்ட ஸ்ரேஷன் ஃபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் ‘கோல்ட்ரிஃப்’ இருமல் சிரப் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டது. அந்த மருந்து சந்தையில் இருந்து முழுமையாக திரும்ப பெறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து, இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி தொடர்பான சிரப் மருந்துகளை வழங்க வேண்டாம் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டுதல்களை பெற்றோர் மற்றும் மருத்துவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மற்றும் கலவைகள் கட்டாயமாக சரிபார்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு தொகுதி மருந்தும் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதன் பதிவுகள் பராமரிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநில அரசுகள் விழிப்புணர்வை அதிகரித்து, இந்த விதிகள் முறையாக நடைமுறைக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.