தெலங்கானா மாநிலத் தேர்தலில் பிஆர்எஸ் கட்சியின் தோல்விக்கு அக்கட்சியின் அதீத நம்பிக்கையே காரணமாக பார்க்கப்படுகிறது
தெலங்கானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் கேசிஆரின் பிஆர்எஸ் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.
தெலங்கானா மாநிலம் உருவானது முதல் நடைபெற்ற இரு தேர்தல்களில் வெற்றி பெற்ற பிஆர்எஸ் கட்சி இந்த முறை மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்கட்சி பின்னடைவை சந்தித்ததுடன், அம்மாநிலத்தின் அசைக்க முடியாத சக்தியாக பார்க்கப்பட்ட கே.சந்திரசேகர் ராவ் தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
undefined
அம்மாநிலத்தில் பிஆர்எஸ் கட்சியின் தோல்விக்கு அக்கட்சியின் அதீத நம்பிக்கையே காரணமாக பார்க்கப்படுகிறது. இதனை கடந்த 2019 ஆந்திரா சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகிறார்கள் அரசியல் நோக்கர்கள். அந்த தேர்தலில் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்தது. அதற்கு அக்கட்சியின் அதீத நம்பிக்கையே காரணமாக கூறப்படுகிறது. அதே அதீத நம்பிக்கைதான் 2023 தெலங்கானா தேர்தலில் பிஆர்எஸ் கட்சியின் தோல்விக்கு பார்க்கப்படுகிறது.
இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஆளுங்கட்சியின் வெற்றியில் அதீத நம்பிக்கை, எதிரணியினரை குறைத்து மதிப்பிடுவது, சொந்தக் கட்சித் தலைவர்களின் ஊழல், முறைகேடுகள், அராஜகம், களத்தில் அக்கட்சியின் பிடி தளர்ந்தது போன்ற பல காரணங்கள் கூறப்படுகின்றன. அந்த சமயத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை ஆளும் தெலுங்கு தேசம் குறைத்து மதிப்பிட்டது. இப்போது காங்கிரஸ் கட்சியை பிஆர்எஸ் குறைத்து மதிப்பிட்டுள்ளது. இத்தகைய சம்பவங்கள் இரண்டு தேர்தல்களிலுமே எதிர்பாராத முடிவுகளுக்கு காரணமாக அமைந்திருக்கலாம்.
2019 ஆந்திரா சட்டமன்றத் தேர்தலின்போது நடந்த அதேபோன்றதொரு காட்சிகள்தான் இப்போதும் நடந்துள்ளன. அந்த தேர்தலில் தெலுங்கு தேசம், பாஜக, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் இடையே போட்டி நிலவியது. 2023 தெலங்கானா தேர்தலில் பிஆர்எஸ், பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனைப்போட்டி நிலவியது.
2014 தேர்தலில் பாஜக மற்றும் ஜன சேனா கூட்டணியில் ஆட்சிக்கு வந்த தெலுங்கு தேசம் கட்சி, பின்னர் பிரிவினை வாக்குறுதிகள், சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட விவகாரங்களில் பாஜகவுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தது தெரிந்ததே. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு விமர்சித்துள்ளார். அதீத நம்பிக்கை, ஜென்மபூமி கமிட்டிகளின் தவறுகள், தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களிடையே இடைவெளி என பல காரணங்களால் 2019 சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் தோல்வியடைந்தது. அதேசமயம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 151 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. மீண்டும் ஆட்சிகயமைப்போம் என்ற தெலுங்கு தேசத்தின் கனவு தகர்ந்தது.
தனி தெலங்கானாவை அடைந்த பிறகு, நடந்த இரு தேர்தல்களிலும் டிஆர்எஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இம்முறையும் அதிகாரத்தின் கடிவாளத்தை கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைக்கும் ஆர்வத்தில் அக்கட்சி இருந்தது. அதற்கேற்ப, கே.சி.ஆரும், கே.டி.ஆரும் தங்களுக்கான வியூகங்களை வகுத்தனர்.
ராஜஸ்தானில் ஆட்சியமைக்கும் பாஜக: அடுத்த முதல்வர் யார்?
தெலங்கானா உருவான பிறகு, அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வலுவிழந்து காணப்பட்டது. அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் முழுமையாக செயல்படாததால், வெற்றி எளிதாக இருக்கும் என பி.ஆர்.எஸ். கட்சி நினைத்தது. இருப்பினும், அப்போதைய டிஆர்எஸ் இப்போதைய பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகிய ரேவந்த் ரெட்டி தெலங்கானாவில் காங்கிரஸின் ஆட்சியை சாத்தியப்படுத்தியுள்ளார்.
ரேவந்த் ரெட்டி பல முயற்சிகள் செய்து காங்கிரஸ் தலைவர்களை ஒருங்கிணைத்து முதல் அடியை எடுத்து வைத்தார். கே.சி.ஆரை கடுமையாக விமர்சித்து பொதுமக்களிடம் செல்ல முயன்றனர். அதே சமயம் ரேவந்த் ரெட்டியின் பாதயாத்திரை கேசிஆர் முகாமில் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம். ஆனாலும், தெலங்கானா உணர்வில் வலுவாக உள்ள பிஆர்எஸ், காங்கிரஸ் கட்சியால் தங்களை ஒன்றும் செய்து விட முடியாது என்ற அதீத நம்பிக்கையில் இருந்தனர்.
ஓட்டுக்காக ரூபாய் நோட்டு பிரச்னையை தைரியமாக எதிர்கொண்டதுடன் பாதயாத்திரை, முக்கிய தலைவர்களின் ஒருங்கிணைப்பு என தெலங்கானா காங்கிரஸை ரேவந்த் ரெட்டி பலப்படுத்தினார். அதே சமயம், பா.ஜ.க.வுடன் கே.சி.ஆரின் விரிசல், மோடி மீதான கடுமையான விமர்சனம், ஆளுஅர் தமிழிசை புறக்கணிப்பு, ரேவந்த் ரெட்டியை குறைத்து மதிப்பிடுவது, ராஜையா போன்ற டிஆர்எஸ் தலைவர்களின் தனிப்பட்ட செயல்கள் கேசிஆரின் ஹாட்ரிக் லட்சியத்திற்கு பெரும் அடியாக அமைந்துள்ளது.
ஒரு கட்டத்தில் ஷர்மிளாவின் பாதயாத்திரை ஒய்.எஸ்.ஆர்.டி.பி என்ற பெயரில் கட்சியை நிறுவி காங்கிரஸ் வாக்குகளை பிளவுபடுத்தும் என்று கருதப்பட்டாலும் கடைசி நேரத்தில் அவர் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்தது முக்கியமானதாக மாறியது. பிஆர்எஸ் எதிர்ப்பு காங்கிரசுடன் சேர வேண்டும் என்பதற்காக தேர்தலில் போட்டியிடாமல் காங்கிரசை ஆதரிப்பதாக அவர் அறிவித்தது பரபரப்பானது. ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் மற்றும் ஒய்எஸ்ஆர்டிபியின் வியூகம் பிஆர்எஸ் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
தெலுங்கானா மாநிலம் அமைப்பதில் டிஆர்எஸ் (இன்றைய பிஆர்எஸ்) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முக்கியமானவை. அதனால்தான் இரண்டு முறை பி.ஆர்.எஸ்.க்கு வாய்ப்பு கொடுத்த தெலுங்கானா மக்கள், இப்போது முன் வந்த காங்கிரசுக்கு மகுடம் சூட்டியுள்ளனர்.