தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
மொத்தம் 119 தொகுதிகள் கொண்ட தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படவுள்ளன. ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல்களில் மற்ற 4 மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தெலங்கானா மாநிலம் மட்டுமே மீதமுள்ளது.
அந்த வகையில், தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு வருகிற 30ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். பாஜகவை பொறுத்தவரை பிரதமர் மோடி மட்டும் சுமார் 10க்கும் மேற்பட்ட தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலம்ந்து கொண்டுள்ளார். கடைசியாக, நேற்றுக் கூட திருப்பதியில் சுவாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு அம்மாநிலத்தில் அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா பிரிந்ததில் இருந்து இரண்டு சட்டமன்றத் தேர்தல்களை அம்மாநிலம் சந்தித்துள்ளது. இரண்டிலுமே கேசிஆரின் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியே வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளது. இந்த முறை கேசிஆரை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்க எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. எனவே, காங்கிரஸ், பாரத் ராஷ்ட்ர சமிதி, பாஜக ஆகிய கட்சிகளிடையே அம்மாநிலத்தில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. இதில், காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை வாய்ப்பு அதிகம் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
நாளை மறுநாள் நடைபெறவுள்ள தேர்தலில் மொத்தம் 2,290 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல்வர் சந்திரசேகர ராவ், அவரது மகன் கே.டி.ராமா ராவ், தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட பலர் களத்தில் உள்ளனர். கஜ்வெல் மற்றும் காம்மரெட்டி ஆகிய இரு தொகுதிகளில் கேசிஆர் போட்டியிடுகிறார். கோடங்கல் மற்றும் காம்மரெட்டி ஆகிய இரு தொகுதிகளில் ரேவந்த் ரெட்டி களம் காண்கிறார். பாஜக ஹுசூராபாத் எம்.எல்.ஏ. எட்டலா ராஜேந்தர், அந்த தொகுதி தவிர கஜ்வெல் தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் அதிரடி!
கடந்த 2018ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 119 இடங்களில், பாஜக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) ஆகிய கட்சிகள் தலா 7 இடங்களில் வென்றன. ஆளும் பிஆர்எஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 17 இடங்களில் பாஜக 4 இடங்களையும், காங்கிரஸ் 3 இடங்களையும், ஏஐஎம்ஐஎம் ஒரு இடத்தையும் கைப்பற்றியது. ஆளும் பிஆர்எஸ் ஒன்பது இடங்களில் வெற்றி பெற்றது. 2018 மாநிலத் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் 7ஆக இருந்தது. ஆனால், 2019 மக்களவைத் தேர்தலில் அக்கட்சியின் வாக்கு சதவீதம் 19.7ஆக உயர்ந்தது.