கர்நாடக அரசு விளம்பரங்களுக்கு தடை விதித்த தேர்தல் ஆணையம்... என்ன காரணம் தெரியுமா?

By Ramya sFirst Published Nov 28, 2023, 9:59 AM IST
Highlights

தெலுங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கர்நாடக அரசின் விளம்பரங்களை தெலுங்கானா நாளிதழ்களில் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தெலங்கானாவில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வரும் 30-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், அம்மாநிலத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பாரதிய ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

எனினும் ஆளும் பாரதிய ராஷ்டிரிய சமிதி - காங்கிரஸ் கட்சி இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியும், இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

Latest Videos

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தெலங்கானாவில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த சூழலில் தெலங்கானா நாளிதழ்களில் கர்நாடக அரசின் விளம்பரங்கள் இடம்பெற்றிருந்தது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் கர்நாடக அரசு சார்பில் விளம்பரம் கொடுத்திருப்பது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயல் என்று ஆளும் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியும், பாஜகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தன.

இந்த புகாரை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் கர்நாடக அரசின் விளம்பரங்களை தெலுங்கானா நாளிதழ்களில் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக அரசு முதன்மை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம், இன்று மாலை 5 மணிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் தெலுங்கானாவில் நடைமுறையில் உள்ள தேர்தல் நடத்தை விதிகளை கருத்தில் கொண்டு தகவல் துறை அதிகாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பி உள்ளது.

தெலங்கானாவில் ரைது பந்து திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க தெலுங்கானா அரசுக்கு அளித்த அனுமதியை, மாநில அமைச்சர் ஒருவர் பகிரங்கமாக அறிவித்ததையடுத்து, தேர்தல் ஆணையம் அந்த அனுமதியை திரும்பப் பெற்றது. தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் இருந்ததால் அந்த அனுமதியை நிறுத்தி வைத்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை, திட்டத்தின் கீழ் எந்த பணமும் வழங்கப்படாது" என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

தெலுங்கானாவில் வியாழக்கிழமை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களின் வாக்குகளுடன் டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 

click me!