இந்து பண்டிகைகளுக்கான விடுமுறையை குறைத்து, முஸ்லிம் பண்டிகைகளுக்கான விடுமுறையை அதிகரிப்பதாக பீகார் அரசுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது
முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அரசு, ஜன்மாஷ்டமி, ரக்ஷாபந்தன், ராமநவமி, சிவராத்திரி, டீஜ், வசந்த பஞ்சமி மற்றும் ஜிவித்புத்ரிகா ஆகிய இந்து பண்டிகைகளுக்கான விடுமுறையை குறைத்துள்ளது. அதேசமயம், இஸ்லாமிய பண்டிகைகளான, ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளுக்கு தலா மூன்று நாட்கள் விடுமுறையும், முஹரம் பண்டிகைக்கு இரண்டு நாட்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநில அரசு அடுத்த ஆண்டுக்கான விடுமுறை காலாண்டரை நேற்று வெளியிட்டது. அதில், இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விடுமுறை நாட்காட்டியின்படி ஆசிரியர்களின் கோடை விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்களுக்கு இந்த மாற்றம் செய்யப்படவில்லை. ஆசிரியர்களுக்கான 60 நாட்கள் விடுமுறையில், 38 நாட்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்றும், ஆண்டுக்கு 22 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதேபோன்ற ஒரு சர்ச்சை வெடித்தது, அடுத்த ஐந்து மாதங்களுக்கு மாநில பள்ளிகளுக்கான விடுமுறைகளின் எண்ணிக்கை 22லிருந்து 8 ஆகக் குறைக்கப்பட்டது. இதற்கு ஆசிரியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது.
கர்நாடக அரசு விளம்பரங்களுக்கு தடை விதித்த தேர்தல் ஆணையம்... என்ன காரணம் தெரியுமா?
இந்த நிலையில், தற்போதைய அறிவிப்பு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிதீஷ் குமார் தலைமையிலான பீகார் அரசு இந்து பண்டிகைகளுக்கான விடுமுறையை குறைத்து, முஸ்லிம் பண்டிகைகளுக்கான விடுமுறையை அதிகரித்து வருவதாக பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
“இந்த நடவடிக்கை திருப்திப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ளது. மாமா - மருமகன் அரசின் இந்துக்களுக்கு எதிரான முகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. ஒருபுறம், முஸ்லிம்களின் பண்டிகைகளுக்கான விடுமுறைகள் பள்ளிகளில் நீட்டிக்கப்படுகின்றன, அதே நேரத்தில் இந்து பண்டிகைகளுக்கான விடுமுறைகள் ரத்து செய்யப்படுகின்றன. வாக்கு வங்கிக்காக சனாதனத்தை வெறுக்கும் அரசுக்காக வெட்கப்படுகிறோம்.” என பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அஷ்வினி சௌபே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.