தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த அக்டோபர் 9ஆம் தேதி முதல் இன்று வரை ரூ. 603 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி, ரொக்கம், போதைப்பொருட்கள், இலவச பொருட்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தெலுங்கானா தேர்தல் நவம்பர் 30ஆம் தேதி நடக்கிறது. மொத்தம் இருக்கும் 119 தொகுதிகளுக்கான தேர்தலில் பாரத் ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ், பாஜக என்று மொத்தம் 2,290 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். தெலுங்கானா மாநிலம் தோற்றுவித்ததில் இருந்து இரண்டாவது முறையாக பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. சந்திரசேகர் ராவ் முதல்வராக இருந்து வருகிறார். இந்த முறை கடுமையான தேர்தல் களத்தை சந்தித்து வருகிறார்.
தேர்தல் நடந்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த அக்டோபர் 9ஆம் தேதி முதல் இதுவரை ரூ. 603 மதிப்பிலான பொருட்களை தேர்தல் ஆணையம் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அதாவது ரூ. 214 கோடி மதிப்பிலான ரொக்கம், ரூ. 179 கோடி மதிப்பிலான தங்கம், ரூ. 96 கோடி மதிப்பிலான மது, ரூ. 34 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள், ரூ. 78 கோடி மதிப்பிலான இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மகளின் திருமணத்திற்காக சேமித்து வைத்த ரூ.2 லட்சம் பணத்தை கரையான்கள் அரித்ததால் அதிர்ச்சி..
அதைத் தொடர்ந்து சட்டசபை தேர்தலுக்கான அட்டவணை (அக்டோபர் 9ஆம் தேதி) வெளியானதில் இருந்து, '1950' ஹெல்ப்லைனுக்கு 1,987 அழைப்புகள் வந்துள்ளன. தேசிய குறை தீர்க்கும் சேவையில் (என்ஜிஆர்எஸ்) பதிவு செய்யப்பட்ட புகார்களின் அடிப்படையில் மொத்தம் 20,670 புகார்கள் பெறப்பட்டு அவற்றில் 20,301 புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன.
தெலுங்கானா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஈடுபட்டு வருகின்றனர். அமித் ஷா இன்று பிரச்சாரம் மற்றும் ரோடு ஷோவில் ஈடுபடுகிறார்.