காற்றின் தரம் சற்று மேம்பாடு அடைந்துள்ளதால் டெல்லியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டு, 5 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் நவம்பர் 10 ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாகவும், 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மூட வேண்டிய அவசியமில்லை. ஆனால், அம்மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை எடுப்பது குறித்து அவர்கள் பரிசீலிக்கலாம் எனவும் டெல்லி அரசு கடந்த 5ஆம் தேதி அறிவுறுத்தியது.
ஆனாலும், காற்றின் தரம் மேம்படாததால் இந்த விடுமுறையானது அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், காற்றின் தரம் சற்று மேம்பாடு அடைந்துள்ளதால் டெல்லியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும், வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் காலை கூட்டங்கள் நடத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள பள்ளிகளை மீண்டும் திறக்கும் முடிவை கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது, காற்றின் தரக் குறியீட்டில் (AQI) நேர்மறையான மாற்றங்கள் மற்றும் IMD/IITM இன் காற்று தரத்தின் கணிப்புகள் உள்ளிட்டவைற்றை அடிப்படையாக கொண்டு டெல்லியில் அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகளையும் திறக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தீக்ஷா பூமிக்குச் செல்லும் பௌத்தர்களுக்குப் பயண உதவி: ரவிக்குமார் எம்.பி. மீண்டும் கோரிக்கை!
டெல்லி காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நான்கு நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. நிலை I - மோசமானது (காற்று தரக் குறியீடு 201-300), நிலை II - மிகவும் மோசமானது (காற்று தரக் குறியீடு 301-400), நிலை III - கடுமையானது (காற்று தரக் குறியீடு 401-450) மற்றும் நிலை IV - Severe Plus (காற்று தரக் குறியீடு 450க்கு மேல்) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்றுத் தரக்குறியீடு 460 என்ற அளவுக்கு அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் வெகுகாலமாகவே மோசமாக உள்ளது. அண்டை மாநில விவசாயிகள் அறுவடைக் காலம் முடிந்து விவசாயக் கழிவுகளை எரிப்பது, புதிய கட்டுமானங்கள், பழைய கட்டடங்கள் இடிப்பு, வாகனங்களின் மிகுதி உள்ளிட்ட பல்வேறு காரணிகள் காற்று மாசுவுக்கு காரணமாக கூறப்படுகிறது.