
குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. நீண்ட நெடிய ஆலோசனைக்குப் பிறகு பீகார் மாநில ஆளுநரும், தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவருமான ராம்நாத் கோவிந்தை தனது வேட்பாளராக பா.ஜ.க. களமிறக்கியுள்ளது. இன்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
பா.ஜ.க.வுக்கு கடும் நெருக்கடி அளிக்கும் வகையில் முன்னாள் மக்களவை சபாநாயகர் மீராகுமாரை காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் வேட்பாளராக தேர்வு செய்தது.
சுதந்திரம் அடைந்த பின் முதல் முறையாக பெரும்பான்மை பலத்துடன் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. தனது வேட்பாளரை வெற்றி அடையச் செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதிமுகவின் இரு அணிகளும் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது என அறிவித்துள்ளன. வெற்றி பா.ஜ.க.வுக்குத் தான் என்று கணிக்கப்பட்ட நிலையில், மீரா குமாரை எதிர்க்கட்சிகள் முன்னிறுத்தியுள்ளதால் குடியரசுத் தலைவர் தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில் பா.ஜ.க.முன்னிறுத்தியுள்ள வேட்பாளரே வெற்றி பெறுவார் தமிழக பா.ஜ.க. தலைவர்
தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், “குடியரசுத் தலைவர் தேர்தலை காங்கிரஸ் அரசியலாக மாற்றியுள்ளது. எங்களது வேட்பாளருக்கு அதிமுகவின் இரு அணிகளும் ஆதரவு தெரிவித்திருப்பதால், பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” என்றார்