
நாட்டில் உள்ள விவசாயிகள் பயிர்கடன் தள்ளுபடியை அரசிடம் கேட்பது தற்போது ‘ஃபேஷனாகி’ வருகிறது என்று மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கிண்டல் செய்தார். ஆனால், எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டி கண்டனம் தெரிவிக்கவே, நான்அப்படி கூறவே இல்லை, அரசியல் கட்சிகளைத் தான் பேசினேன் என்று அந்தர் பல்டி அடித்தார்.
மும்பையில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது-
ஃபேஷனாகிவிட்டது
மஹாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் உள்ள விவசாயிகள் பயிர்கடன் தள்ளுபடி கேட்கிறார்கள். இன்றைய சூழலில் விவசாயிகள் பயிர்கடன் தள்ளுபடி கேட்பது ‘ஃபேஷனாகி’ வருகிறது. விவசாயக் கடன் தள்ளுபடி என்பது இறுதிக் கட்ட தீர்வு இல்லை. அது குறித்து இறுதிக்கட்டமாகவே பரிசீலிக்க வேண்டும்.
கட்டமைப்பு வசதிகள்
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு தகுந்த விலை கிடைப்பது அவசியம். இதுபோன்ற விஷயங்களுக்கும் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக விவசாயிகளுக்காக புதிய ேசமிப்பு கிடங்குகள், பதப்படுத்தும் கிடங்குகள், குளிர்சாதன வாகனங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை நாங்கள் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு கடன்தொகை எளிதாக கிடைக்கவும் உறுதி செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
கண்டனம்
இதற்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உயிரையே கொடுத்துவிட்டார்கள்...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியன் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்து பேசுகையில், “ இப்போது விவசாயிகள் தற்கொலையை ஆளும் பா.ஜனதா அரசு ஃபேஷனாக மாற்றிவிட்டதா? எங்களின் விவசாயிகள் பயிர்கடன் தள்ளுபடிக்காக உயிரைக் கொடுத்துவிட்டார்கள். இதைக் காட்டிலும் இன்னும் அதிகமாக ஏதாவது செய்ய வேண்டுமா?’’ எனத் தெரிவித்தார்.
கெஜ்ரிவால் கண்டனம்
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “ பணக்காரர்களுக்கு நீங்கள் கடன் தள்ளுபடி கொடுக்கும் பா.ஜனதா அரசு, விவசாயிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடியை ஃபேஷனாகப் பார்க்கிறது. இது சரியல்ல. நீங்கள் குறிப்பிட்ட நபரின் கடனை தள்ளுபடி செய்கிறீர்கள். கோடிக்கணக்கான விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறீர்கள். இதன் மூலம் பா.ஜனதா ஒரு விதமான அரசியல் செய்து வருகிறது’’ என்றார்.
வெங்கையா விளக்கம்....
விவசாயிகள் பயிர்கடன் தள்ளுபடி கேட்பது ஃபேஷன் என்று கூறவில்லை என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு விளக்கம் அளித்துள்ளார். அவர் டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், “ விவசாயிகள் பயிர்கடன் கேட்பது ஃபேஷன் என்று சொல்லவில்லை. அரசியல் கட்சிகள் கேட்பதுதான் ஃபேஷனாகிவிட்டது என்று கூறினேன்.அரசியல் கட்சிகள் குறித்து தான் அந்த கருத்தை கூறினேன். ஒருவொருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு கடன் தள்ளுபடி அறிவிக்கிறார்கள் என்று கூறினேன்’’ என்றார்.