ஒடிசா விபத்து களத்தில் தமிழக அமைச்சர்கள்.. திடீரென ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் சந்தி​ப்பு !!

By Raghupati RFirst Published Jun 3, 2023, 11:57 PM IST
Highlights

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் சந்தித்து பேசினர்.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தில் எதிரே வந்த சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த நிலையில், யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் ஹவுரா அதிவிரைவு ரயிலும் அங்கு விபத்துக்குள்ளானது. மூன்று ரயில்கள் மோதிக் கொண்ட இந்த கோர விபத்தில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 900-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

தமிழக அரசின் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துறை கூடுதல் தலைமைச் செயலர் பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலர் குமார் ஜெயந்த், தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக் ஆகிய 5 பேர் அடங்கிய குழுவினர் ஒடிசா சென்றனர்.

ஒடிசா சென்ற தமிழ்நாடு அரசின் குழு இரு பிரிவாக செயல்படுகிறது. அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையிலான மற்றொரு குழு, ஒடிசா அரசின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து விவரங்களைப் பெற்று தமிழ்நாடு அரசுக்கு வழங்கி வருகிறது.

இதையும் படிங்க..ஒரே பாதையில் வந்த ரயில்கள்.. சிக்னல் பிரச்னை.! கோரமண்டல் ரயில் விபத்தில் நடந்தது என்ன?

இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழர்களை சந்த்து தமிழ்நாடு குழுவினர் நலம் விசாரித்தனர்.இந்த நிலையில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் சந்தித்தனர். இச்சந்திப்பில் காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டுள்ளதாக ஒடிசா முதல்வர் தமிழ்நாட்டு அமைச்சர் குழுவிடம் தெரிவித்தார்.

இந்த சந்திப்பிற்கு பிறகு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவசங்கர் ஆகியோர் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டு பாலசோர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இதுதொடர்பான விவரங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க..ரயில் விபத்தில் தமிழர்கள் எத்தனை பேர் பலி.? ஒடிசாவில் இருக்கும் தமிழ்நாடு அதிகாரிகள் சொன்ன முக்கிய தகவல்!!

click me!