
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவரை இலங்கை கடற்படையினர் சுட்டுக்கொலை செய்ததால் பெரும் கொந்தளிப்பான சூழல் நிலவி வரும் நிலையில், எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் விதமாக பாரதிய ஜனதா எம்.பி. சுப்பிரமணிய சாமி கருத்து தெரிவித்துள்ளார்.
ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 400-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்க நேற்று முன் தினம் சென்று இருந்தனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ராமேசுவரம்மீனவர்களை விரட்டியடித்ததுடன் காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.
இதில் தங்கச்சி மடத்தை சேர்ந்த டிட்டோ என்பவரது படகில் சென்ற பிரிட்ஜோ(வயது 21) என்ற மீனவர் குண்டு பாய்ந்து பலியானார். அவரது கழுத்தில் குண்டு பாய்ந்து இருந்தது. இதே போல் கிளிண்டன் என்ற மீனவர் குண்டுக்காயம் அடைந்தார். இந்த சம்பவத்தால் ராமேசுவரத்தில் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது, மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு பிரச்சினையில் இருந்து குதர்க்கமாகவும், பொறுக்கிகள் என்றும் கருத்து தெரிவித்து வரும் பாரதிய ஜனதா எம்.பி.சுப்பிரமணியசாமி, இந்த விவகாரத்திலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து, தமிழர்களின் உணர்வுகளோடு விளையாடியுள்ளார்.
டுவிட்டரில் சுப்பிரமணிய சாமி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது-
நீண்ட காலமாக இருக்கும் இலங்கை-தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். ஆனால், யாழ்பாணத்தில் இருக்கும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர்களும், தமிழகத்தில் இருக்கும் சில அமைப்புகளும் இதற்கு தீர்வு கிடைக்க விரும்பவில்லை. இதை புரையோடிப்போக வேண்டும் என்றே நினைக்கிறார்கள்.
தமிழகத்தில் உள்ள நகரங்களை சாக்கடையாக்குவதற்கு பதிலாக, ‘பொறுக்கிகள்’ கட்டுமரத்தை எடுத்துக்கொண்டு கடலுக்கு சென்று, இலங்கை கடற்படையுடன் சண்டையிடட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.