
ஆசிய பசிபிக் பகுதியில் உள்ள 16 நாடுகளில் ஊழல், லஞ்சம் வாங்குவதில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் 10 நபர்களில் 7 பேர் அரசின் பொதுச்சேவையைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்கும் அவல நிலை நிலவுகிறது.
அதே சமயம், ஜப்பானில் 0.2 சதவீதம் பேர்மட்டுமே லஞ்சம் கொடுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
22 ஆயிரம் பேர்
ஜெர்மனியின் பெர்லின் நகரைச் சேர்ந்த டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (சர்வதேச வெளிப்படைத்தன்மை) அமைப்பு ஆசிய பசிபிக் பகுதியில் உள்ள 16 நாடுகளில் ஊழல் அளவு எந்த அளவு இருக்கிறது என்பது குறித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வுக்காக 16 நாடுகளைச் சேர்ந்த 22 ஆயிரம் பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது-
7 பேர்
ஆசிய பசிபிக் பகுதியில் உள்ள 16 நாடுகளில், இந்தியாவில் ஊழல் விகிதம் என்பது மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்தியாவின் அரசின் பொதுச்சேவைகளைப் பெறுதற்காக 10-ல் 7 பேர் லஞ்சம் கொடுக்கிறார்கள்.
இந்தியாவில் பிரதமர் மோடியின் அரசு ஊழலுக்கு எதிராக எடுத்துவதும் நடவடிக்கை பாராட்டும் விதத்தில் இருக்கிறது என்று 50 சதவீதம் தெரிவித்துள்ளனர்.
12 மாதங்களாக அதிகம்
அதே சமயம், கடந்த 12 மாதங்களாக ஊழல் அதிகரித்து விட்டதாக 40 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். 63 சதவீதம் பேர் தனிப்பட்ட முறையில் ஊழலுக்கு எதிராக போராடி வருகிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.
அரசின் பொதுச்சேவைகளைப் பெறுவதற்கு வியட்நாம் நாட்டுக்கு அடுத்த படியாக, இந்தியாவில் அதிகமான மக்கள் லஞ்சம் கொடுத்து வருகின்றனர்.
ஆசிய பசிபிக் நாடுகளில் ஊழல் குறைந்து வருவதாக 22 சதவீதம் பேர் மட்டுமே தெரிவித்துள்ளனர். ஆனால், 40 சதவீதம்பேர் ஊழல் அதிகரித்து வருவதாக வேதனை அடைந்துள்ளனர்.
38 சதவீதம் பேர்
அரசின் முக்கிய சேவைகளான பள்ளி கல்வி, மருத்துவமனை, சான்றிதழ்கள், போலீஸ், பொதுச்சேவை, நீதிமன்றம் உள்ளிட்டவற்றில் லஞ்சம் எந்த அளவுக்கு வழங்கப்படுகிறது என்பது அதிகமாக ஆய்வு செய்யப்பட்டது. இதில் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் மக்கள் 38 சதவீதம் பேர் தங்களுக்கு கிடைக்கும் சேவை வேகமாக கிடைக்க லஞ்சம் கொடுப்பதாக தெரிவிக்கின்றனர்.
இந்தியா மோசம்
இந்தியாவைப் பொருத்தவரை அரசின் மருத்துவச் சேவைகளைப் பெறவும், அடையாளச் சான்றிதழ்களைப் பெறவும் அதிகமான லஞ்சம் கொடுப்பதாகத் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற சேவைகளைப் பெறுவதற்காக 59 சதவீதம் பேர் லஞ்சம் கொடுப்பதாகக் தெரிவிக்கின்றனர். இதற்கு அடுத்த இடத்தில் கல்விக்காக லஞ்சம் கொடுப்பதாக 58 சதவீதம் பேர்தெரிவிக்கின்றனர்.
பாக்ஸ் மேட்டர்....
பேச்சைக் குறையுங்கள்; செயலில் காட்டுங்கள்
இது குறித்து சர்வதேச வெளிப்படைத்தன்மை அமைப்பின் தலைவர் ஜோஸ் உகாஸ் கூறுகையில், “ ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் ஆசிய பசிபிக் நாடுகளின் அரசுகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். பேச்சைக் குறைத்து செயலில் கவனம் செலுத்த வேண்டிய நேரம். கோடிக்கணக்கான மக்கள் அடிப்படைச் சேவைகளைப் பெற லஞ்சம் கொடுக்க வற்புறுத்தப்படுகின்றனர். இதில் அதிகமான ஏழைமக்கள் பலியாகிறார்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.