
பிரதமர் மோடியின் அனைவருக்கும் வங்கிக்கணக்கு திட்டமான ஜன் தன் வங்கிக்கணக்கிலும் குறைந்த பட்ச இருப்புத் தொகை வைக்க வேண்டுமா என்பது குறித்து பாரத ஸ்டேட் வங்கித் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா விளக்கம் அளித்துள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்கள் மாதம் ஒன்றுக்கு குறைந்த பட்ச இருப்பாக ரூ. 500 வைத்து இருந்தால் போதுமானது. காசோலை புத்தகம் வைத்திருந்தால், ரூ.1000 இருப்பாக வைத்திருத்தல் அவசியம், இதுதான் நாடு முழுவதும் நடைமுறையில் இருக்கிறது.
ஆனால், ஏப்ரல் 1-ந்தேதி முதல், சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் வசித்து ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து இருந்தால் மாத குறைந்தபட்ச இருப்பாக ரூ.5 ஆயிரம் வைத்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் ரூ.50 முதல் ரூ.100 வரை அபராதம் விதிக்கப்படும்.
நகரங்களில் வசிப்பவர்கள் ரூ.3 ஆயிரம், சிறுநகரங்களில் வசிப்பவர்கள் ரூ.2 ஆயிரம், கிராமங்களில் வசிப்பவர்கள் ரூ. ஆயிரம் தங்கள் கணக்கில் குறைந்தபட்சமாக வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், ரூ.20 முதல் 50 அபராதம் வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த அறிவிப்பு பிரதமர் மோடியின் ஜன் தன் வங்கிக் கணக்கு பொருந்துமான என்பது குறித்து தெளிவான அறிவிப்பு இல்லை. ஏனென்றால், நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக குறைந்தபட்ச இருப்புத்தொகை தேவையில்லை என்ற சலுகையுடன் ஜன் தன் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டது.
ஆதலால், ஜன் தன் வங்கிக்கணக்கு வைத்து இருப்பவர்களுக்கும் இந்த புதிய விதிமுறை பொருந்துமா? என்பது குறித்து பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா நிருபர்களிடம் கூறுகையில், “ ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கு தொடங்கியவர்களுக்கு குறைந்த பட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே சமயம் மற்ற சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்களுக்கு இது பொருந்தும்.
நாங்கள் கொண்டு வந்துள்ள இந்த விதிமுறை புதிதாக கொண்டு வரப்பட்டு உள்ளதாக பெரிதாக பேசப்பட்டு வருகிறது. அனைத்து வங்கிகளிலும் குறைந்தபட்ச இருப்புத் தொகை அவசியம் என்ற விதிமுறை இருந்து வருகிறது.
வாடிக்கையாளர்களை அதிகம் சேர்க்க வேண்டும், வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக கடந்த 2012ம் ஆண்டு குறைந்த பட்ச இருப்பு தொகை திட்டத்தை தள்ளுபடி செய்தோம். அதை இப்போது கொண்டு வருகிறோம்'' எனத் தெரிவித்தார்.