
இலங்கை சிறையிலுள்ள 11 மீனவர்கள் மற்றும் அந்நாட்டு அரசு விடுவிக்காமல் உள்ள 135 படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் , பாக். நீரிணைப் பகுதியில் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களின் நீண்ட நாட்கள் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சனைகள் குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பிடித்துச் செல்லப்படுவதாகவும், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் வெவ்வேறு காலக்கட்டங்களில் பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்களில், அந்நாட்டு சிறையில் தற்போது 11 மீனவர்கள் உள்ளதாகவும், 135 படகுகள் விடுவிக்கப்படாமல் இருப்பதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக மீனவர் பிரச்னை குறித்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு பலமுறை கடிதங்கள் மூலம் எடுத்துரைத்ததையும் எடப்பாடி பழனிசாமி நினைவுகூர்ந்துள்ளார்.
எனவே, இலங்கை சிறையில் உள்ள 11 மீனவர்களையும், விடுவிக்கப்படாமல் உள்ள 135 படகுகளை மீனவர்கள் மீண்டும் பயன்படுத்தும் வகையில், மீட்டுத்தர வேண்டும் என்றும், இதுகுறித்து அவசரமாக இலங்கை அதிகாரிகளுடன் பேசி தூதரகரீதியில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.