
பசு, ஆடு, எருது, நாய், குதிரை உள்ளிட்டவற்றை ஆன்-லைனில் விற்கவும், வாங்கவும் அரசு சார்பில் இணையதளத்தை தெலங்கானா அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம், விவசாயிகள் தங்கள் கால்நடைகளை சந்தைக்கு நேரடியாக கொண்டுவராமல் ஆன்-லைனிலேயே விற்பனை செய்யவும், வாங்கவும் முடியும்.
pashubazar.telangana.gov.in என்ற இணைதள முகவரியில் விவசாயிகள் தங்கள் கால்நடைகள், நாய், பூனை உள்ளிட்ட வீட்டு வளர்ப்பு பிராணிகளையும் விற்கலாம், வாங்கலாம்.
இது குறித்து கால்நடைத் துறையின் இணை இயக்குநர் வி. ஜகன்நாதா சாரி கூறுகையில், “ மத்திய அரசின், தேசிய தகவல் மையத்தின் உதவியுடன், இந்த இணையதளத்தை தெலங்கானா அரசு உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் கால்நடைகளை விவசாயிகள் சந்தையில் கொண்டுபோய் விற்பனை செய்யும் செலவு குறையும், சந்தைக்கு கால்நடைகளை கொண்டு செல்ல ஆகும் போக்குவரத்து செலவு, நாள் முழுவதும் அவர்கள் காத்திருக்கும் ஊதியம், விவசாயிகளுக்கு கால்நடைகளை பாதுகப்பது, தீவணம் என ஏராளமான செலவுகள் செய்ய வேண்டியது இருக்கும்.
ஒருவேளை கால்நடை விற்பனையாகாவிட்டாலும், மீண்டும் வீ்ட்டுக்கு கொண்டு வர வேண்டியது இருக்கும். இதனால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு செலவு ஏற்படும்.
இதைத் தவிர்க்கவே கால்நடைகள், வீட்டுப் பிராணிகளை விற்கவும், வாங்கவும் இணையதளம் உருவாக்கி இருக்கிறோம். இந்த இணையதளம் மூலம் விவசாயிகள் நல்ல விலைக்கு கால்நடைகளை அரசின் உதவி, சான்றிதழோடு விற்பனை செய்யலாம். ஒரு விவசாயி தன்னிடம் இருக்கும் 5 கால்நடைகளை பதிவு செய்ய முடியும்.
ஒவ்வொரு பதிவும் 30 நாட்கள்வரை அழியாமல் பாதுக்காக்கப்படும், ஒருவேளை விற்பனையாகிவிட்டால், தானாகவே அழிந்துவிடும். இந்த இணையதளத்தில் விவசாயிகள் பசு, எருமை, எருது, நாய், பூனை, ஆடு, பறவைகள் என அனைத்தையும் விற்கலாம் , வாங்கலாம்” எனத் தெரிவித்தார்.