
ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களுக்கு கல்வி முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது. தீவிரவாத அமைப்பான தலிபான்களின் கையில் ஆட்சி சென்ற பின்னர் பெண்களுக்கான அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ரசியா முராடி என்ற பெண் குஜராத் மாநிலத்தில் பொது நிர்வாகத்தில் எம்ஏ முதுகலை பட்டம் முடித்துள்ளார். இதில் தங்கப் பதக்கமும் வென்றுள்ளார். வீர் நர்மத் தெற்கு குஜராத் பல்கலையில் பட்டம் பெற்ற இவருக்கு திங்கள் கிழமை தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
இவர் பட்டம் பெற்ற பின்னர், பெண்களுக்கு வாய்ப்பு அளித்தால் எந்த துறையிலும் சாதித்து காட்டுவார் என்று தலிபான்களுக்கு செய்தியாக தெரிவித்துள்ளார். பொது நிர்வாகத்தில் 8.60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார். இதுவரை இந்தப் பாடத்தில் இதுதான் அதிக மதிப்பெண் என்று கூறப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் இருக்கும் தனது குடும்ப உறுப்பினர்களை சந்திக்கவில்லை இவர்.
கடந்த 2022 ஏப்ரல் மாதம் முதுகலைப் பட்டம் முடித்த இவர், தற்போது அதே பாடத்தில் பிஹெச்டி-யும் செய்து வருகிறார். இவர் குஜராத் வரும்போது கோவிட் தொற்று இருந்த காரணத்தினால், ஆன்லைன் மூலம் கல்வி கற்று வந்துள்ளார். முதல் இரண்டு செமஸ்டர்களுக்கான தேர்வுகளையும் ஆன்லைனில் எழுதியுள்ளார்.
இதுகுறித்து ரசியா முராடி கூறுகையில், ''நான் தொடர்ந்து கல்வியில் கவனம் செலுத்தி தவறாமல் படித்து வந்தேன். தேர்வுக்கு முன்பு ஒரு முறை அனைத்தையும் சரி பார்த்துக் கொண்டேன்'' என்று தெரிவித்துள்ளார். இவர் தனது படிப்புக் காலத்தில் கோவிட் தொற்றில் மட்டுமின்றி, தலிபான்களிடமும் சிறைபடாமல் தப்பித்தார். தங்கப் பதக்கத்துடன் ஸ்ரத்தா அமபேலால் தேசாய் விருதும் பெற்றுள்ளார்.
தலிபான்களை கடுமையாக சாடிய ரசியா, ''கல்வி பெறுவதில் இருந்து பெண்களுக்கு தலிபான்கள் தடை விதித்து இருப்பது அவமானத்துக்கு உரியது. இந்திய அரசுக்கும், ஐசிசிஆர், விஎன்எஸ்ஜியு ஆகிய அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு பதக்கம் கிடைத்து இருந்தாலும், எனது குடும்பத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக பார்க்காமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது. தொலைபேசியில் எனது பெற்றோருக்கு இந்த விஷயத்தை தெரிவிப்பேன். அவர்கள் சந்தோசம் அடைவார்கள். நான் ஆப்கானிஸ்தான் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறேன். உலக சமுதாயமும் ஆப்கானிஸ்தான் மக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். நிலைமை சரியான பின்னர் எனது தாய் நாட்டிற்கு செல்லவே விரும்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து தற்போது இந்தியாவில் 14,000 மாணவர்கள் படித்துக் கொண்டு இருக்கின்றனர். இவர்களுக்கு இந்திய அரசின் பண்பாட்டு தொடர்பு துறை நிதி உதவி அளித்து வருகிறது. தகுதித் தேர்வுகளை முடித்துவிட்டுத்தான் அவர்கள் இந்தியாவில் படிப்பதற்கு வருகின்றனர். பெரும்பாலும் ஆண்கள் தங்களது கல்வியை இந்தியாவில் முடித்த பின்னர் தங்களது நாட்டிற்கு திரும்புவதில்லை. தற்போது அங்கு பெரிய அளவில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையற்ற நிலை நிலவுதால், இந்தியாவில் தங்குவதை நீட்டித்து விடுகின்றனர்.