
அரசு வங்கிகளில் அதிகரிக்கும் வாராக்கடன், தொழிலாளர் சீர்திருத்தம், போதுமான ஊழியர்களை நியமித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கிகள் நாளை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன.
எஸ்.பி.ஐ. வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பேங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வேலை நிறுத்தம் குறித்து முன்கூட்டியே தகவல் அளித்துவிட்டன.
அதேசமயம், தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எப்.சி., ஆக்சிஷ் வங்கி,கோடக் மகிந்திரா வங்கிகம் போல் செயல்படும் என்பதால், இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு காசோலை சேவையைத் தவிர மற்ற சேவைகள் பாதிக்காது எனத் தெரிகிறது.
மத்திய அரசு கொண்டு வரும் தொழிலாளர் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு, வங்கிப்பணிகளை வெளிப்பணி ஒப்படைப்பில் செய்தல், ரூபாய் நோட்டு தடை காலத்தில் கூடுதல் நேரம் பணிபுரிந்ததற்கான ஊதியம், ஊதிய மறு சீராய்வு, போதுமான ஊழியர்களை நியமித்தல், வாராக்கடன்களை மீட்க கடுமையான நடவடிக்கை எடுத்து, கடனை திருப்பிச்செலுத்தாதவர்கள் மீது கிரிமினல்நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.
இந்த வேலை நிறுத்தத்தில் 10 லட்சத்துக்கும் மேல் உறுப்பினர்கள் உள்ள வங்கி யூனியன் ஐக்கிய அமைப்பில் 9 யூனியன்கள் பங்கேற்கின்றன.
ஆனால், பாரதியஜனதா ஆதரவு பெற்ற பாரதிய மஸ்தூர் சங்கங்களான வங்கி ஊழியர்களுக்கான தேசிய அமைப்பு மற்றும் வங்கி அதிகாரிகளுக்கான தேசிய அமைப்பு ஆகியவைகள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அனைத்து இந்திய வங்கி ஊழியர்களுக்கான அமைப்பின் பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாச்சலம் கூறுகையில், “ தலைமை தொழிலாளர் ஆணையர் முன் இந்திய வங்கிகள் அமைப்புக்கும், வங்கி நிர்வாகத்துக்கும் இடையில் கடந்த 21-ந்தேதி நடந்த சமரச பேச்சு தோல்வி அடைந்தது.
எங்களின் கோரிக்கைகளையும், நிபந்தனைகளையும் அவர்கள் ஏற்கவில்லை. ஆதலால், திட்டமிட்டபடி 28-ந்தேதி வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம்'' எனத் தெரிவித்தார்.