
மத்திய அரசு ஜூலை மாதம் முதல் நடைமுறைப்படுத்த உள்ள சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) எளிதாக செயல்பாட்டுக்கு கொண்டுவர, ஜி.எஸ்.டி. கவுன்சில் எடுத்த சில முடிவுகளை திருப்பப் பெற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடுமுழுவதும் ஒரே சீரான மறைமுக வரியான ஜி.எஸ்.டி. வரியை ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த வரி வீதம், துணைச்சட்டங்கள் குறித்து முடிவு செய்ய மாநிலங்கள் நிதி அமைச்சர்கள், மத்திய நிதிஅமைச்சர்தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 16-ந்தேதி நடந்த ஜி.எஸ்.டி.கவுன்சில் குழுக் கூட்டத்தில் மாநில அரசுகளின் முக்கிய கோரிக்கையை கவுன்சில்ஏற்றுக்கொண்டது. அதாவது, மாநிலங்களின் கடல்பரப்பில் 12 கடல்மைல் தொலைவுக்குள் உள் வரும் கப்பல்களிடம் வரிவசூலிப்பது, ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கு கீழ் விற்றுமுதல் இருக்கும் வரி செலுத்துவோரிடம் இருந்து வரியை மாநில அரசுகள் வசூலிப்பது என்ற கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
ஆனால், ஜி.எஸ்.டி. கவுன்சில் மாநிலங்களுக்கு விட்டுக்கொடுத்த இந்த சலுகைகளைக் கண்டித்து மத்திய வருவாய் துறை அதிகாரிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது தொடர்பாக கடந்த மாத இறுதியில் கருப்புப்பட்டை அணிந்து பணியாற்றிய நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் அலுவலகத்தில் மத்திய வருவாய் துறை அதிகாரிகள் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது-
சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க்கின் பாதுகாப்பு மற்றும் நிதி தொடர்பான விசயங்கள் குறித்து மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளன.
மாநிலங்களில் உள்ள அதிகாரிகளுக்கு ஜி.எஸ்.டி. வரியின் கீழ் சேவையை வரியை வசூலிப்பதில் முன் அனுபவம் கிடையாது. மற்ற வரிகளைக் காட்டிலும் சேவை வரி என்பது வித்தியாசமானது. மாநிலங்களுக்கு இடையே வரி தொடர்பான சட்டச்சிக்கல்கள் எழவும் வாய்ப்பு உள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரியை மாநிலங்களில் கையாள்பவர்கள் வருவாய் துறையில் தேர்ச்சி பெறாத அதிகாரிகளால் கையாளப்படும் போதும் பல சிக்கல்களை ஏற்படுத்தும்.
பெரும்பாலான நாடுகள் ஜி.எஸ்.டி. வரியை நடைமுறைப்படுத்தும் போது, தகுதியான ஊழியர்கள், நிபுனத்துவம் பெற்ற ஊழியர்கள் மூலம் செயல்படுத்தாத காரணத்தால் தோல்வி அடைந்துள்ளன. ஆதலால், மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி வசூலிப்பு, மேலான்மை தொடர்பான பணிகளை அனுபவம் இல்லாத மாநிலங்களில் இருக்கும் பொது ஊழியர்களிடம் அளிக்கும் போது பலசிக்கல் ஏற்படலாம். ஆதலால், இதுபோன்ற சிக்கல்களை உங்கள் பார்வைக்கு கொண்டுவர வேண்டியது எங்கள் பொறுப்பு. நாங்கள் தெரிவித்த கவலைகளை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறோம் எனத் தெரிவித்துள்ளனர் .