
சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து வரும் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கடந்த ஆண்டு பிடிபட்ட மது, பணம், போதைப்பொருட்களைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்தலில் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட அளவு பன் மடங்கு அதிகரித்துள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரேதசத்தில் கடந்த 2012ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் போது ரூ.36.29 கோடி பணம், ரூ.6.61. லட்சம் மதிப்புள்ள 3,073 லிட்டர் மது மட்டுமே கைப்பற்றப்பட்டது. ஆனால், 2017ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை ரூ.115.70 கோடி பணம், ரூ.57.69 கோடி மதிப்புள்ள 20.29 லட்சம் பேரல்கள் மது, ரூ.7.91 கோடி மதிப்புள்ள 2,725 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
உத்தரகாண்ட் மாநிலத்தில் இதேபோல், கடந்த 2012-ம் ஆண்டில், ரூ.1.30 கோடி பணம், ரூ.15.15 லட்சம் மதிப்புள்ள 15,151 லிட்டர் மது மட்டுமே கைப்பற்றப்பட்டன. ஆனால், இந்த முறை, ரூ.3.40 கோடி பணம், ரூ.3.10 கோடி மதிப்புள்ள 1.01 லட்சம் லிட்டர் மது, ரூ.37.88 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பிடிபட்டன.
கோவா மாநிலத்தில் கடந்த 4-ந்தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ரூ.2.24 கோடி பணம், ரூ.1.07 கோடி மதிப்புள்ள 76 ஆயிரம் லிட்டர் மது அதிகாரிகளால் பிடிக்கப்பட்டது. இது கடந்த 2012ம் ஆண்டு தேர்தலில் ரூ.60 லட்சம் மட்டுமே பிடிபட்டது, மதுவும், போதைப்பொருளும் மிகக்குறைவாகவே பிடிபட்டுள்ளன.
இதுகுறித்து வருமான வரித்துறையின் மூத்த அதிகாரி கூறுகையில், “ மத்திய அரசு கொண்டு வந்த ரூபாய் நோட்டு தடை எந்த விதத்திலும் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை, கருப்புபணத்தையும் கட்டுப்படுத்தவில்லை. சட்டவிரோதமான வழிகளில் வாக்காளர்களை கவர்ந்து இழுக்கும் செயல்கள் நடந்தன. இவற்றை தடுக்க கண்காணிப்பு குழுக்கள் தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டுதான் வருகின்றன'' என்றார்.