ஆக்ராவில் உள்ள உலக அதிசயமான தாஜ்மஹாலுக்கு போட்டியாக அங்குள்ள மற்றொரு கட்டடக்கலை அதிசயம் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையோரம் அமைந்திருக்கும் தாஜ் மஹால் முகாலயப்பேரரசர் ஷாஜஹானால் கட்டப்பட்டது. உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் தாஜ் மஹாலை ஷாஜஹான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக கட்டினார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த உலக அதிசயத்தை வாழ்நாளில் எப்படியேனும் பார்த்து விட வேண்டும் என்பது பலருக்கும் கனவாக இருக்கலாம். இதன் காரணமாகவே தாஜ்மஹாலில் கூட்டம் எப்போதுமே அலை மோதும்.
இந்த நிலையில், தாஜ்மஹாலுக்கு போட்டியாக ஆக்ராவில் அமைந்துள்ள ஒரு புதிய கட்டிடக்கலை அதிசயம் கூட்டத்தை ஈர்த்து வருகிறது. ஆன்மீக நம்பிக்கையான ராதா சோமி நம்பிக்கையை நிறுவியவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அழகிய வெள்ளை பளிங்குக் கட்டிடமான சோமி பாக் கல்லறை, ஆன்மீக ஆர்வமுள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் கட்டிடக்கலை ஆர்வலர்களுக்கு ஒரு பிரபலமான இடமாக மாறியுள்ளது.
தாஜ்மஹாலில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சோமி பாக் கல்லறையை கட்டி முடிக்க 104 ஆண்டுகள் ஆகியுள்ளது. அதன் பிரம்மாண்டம், கட்டிடக்கலை திறன் ஆகியவற்றை உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலுக்கு போட்டியாக பலரும் கருதுகிறார்கள். இது முகலாய கால நினைவுச்சின்னங்களுக்காக அறியப்பட்ட ஆக்ராவின் கட்டிடக்கலைக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டுகிறது.
ராதா சோமி நம்பிக்கையை பின்பற்றும் தீவிர ஆதரவாளரான பிரமோத் குமார் கூறுகையில், கட்டடத்தை படைத்த படைப்பாளிகள் சமய நம்பிக்கையில் தீவிரமாக இருந்தவர்கள் என்பதற்கும், அவர்களின் அசைக்க முடியாத சமய நம்பிக்கைக்கும், அர்ப்பணிப்புக்கு இந்த கல்லறையின் கட்டுமானம் ஒரு சான்றாகும் என்கிறார்.
52 கிணறுகள் ஆழத்திற்கு அஸ்திவாரம் போடப்பட்டு, 193 அடிக்கு உயர்ந்து நிற்கும் இந்த கல்லறை ராஜஸ்தானில் உள்ள மக்ரானா குவாரிகளில் உள்ள பளிங்கு கற்களால் ஆனது. இந்த கல்லறையின் தோற்றம் 1904களில் இருப்பதாக தெரிகிறது. அலகாபாத்தைச் சேர்ந்த ஒரு கட்டிடக் கலைஞரால் புதிய வடிவமைப்பில் அந்த சமயத்தில் கட்டிடத்திற்கான வேலை தொடங்கியதாக கூறுகிறார்கள். பல தடங்கல்கள் இருந்தபோதிலும், 1922 முதல் கட்டுமானப்பணிகள் தொடர்ந்து கைகளால் நடந்ததாகவும் கூறுகிறார்கள்.
மூத்த வழக்கறிஞர் கபில் சிபலுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
டெல்லியில் இருந்து கொண்டு வரப்பட்ட கிரேன் உதவியுடன் தாஜ்மஹாலை விட உயரமான 31.4 அடி கொண்ட தங்க முலாம் பூசப்பட்ட கலசம் இதன் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ளது என்பது இதன் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இடைவிடாமல் தொடர்ந்த இந்த கட்டுமானமான பணியானது ஒரு வழிபாட்டு முறை போன்றது என்று திட்டத்தில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் கூறுகிறார்கள். உயர்தர பளிங்குக் கற்களை வாங்குவதில் உள்ள சிரமங்கள் மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், இத்திட்டம் ஆன்மீக அர்ப்பணிப்பின் அடையாளமாக உள்ளதாக அவர்கள் நெகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.
இந்த கல்லறை ராதா சோமி நம்பிக்கையின் நிறுவனர் பரம் புருஷ் பூரன் தனி சுவாமிஜி மகாராஜுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஆக்ராவின் தயால்பாக் பகுதியில் உள்ள சோமி பாக் காலனியில் பிரமாண்ட கல்லறை அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் பேருந்துகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சமாதிக்கு வருகை தந்து, அதன் பிரமாண்டைத்தையும், கலைத்திறனையும் ரசித்து செல்கிறார்கள். அங்கு வருகை தாருவோர் கட்டிடத்தின்நேர்த்தியான கைவினைத்திறனைப் பார்த்து தங்கள் பாராட்டையும் பிரமிப்பையும் வெளிப்படுத்துகிறார்கள். இங்கு புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாது. ஆனால், அனுமதி இலவசம்.
தாஜ்மஹால் அதன் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் காதல் கவர்ச்சி காரணமாக பார்வையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். அதே வேளையில், சோமி பாக் கல்லறை வித்தியாசமான ஆன்மீக அனுபவத்தை வழங்குகிறது.