Loksabha Election 2024 முதல் நான்கு கட்டங்களில் 66.95 சதவீத வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையம்!

By Manikanda Prabu  |  First Published May 16, 2024, 9:11 PM IST

மக்களவைத் தேர்தல் 2024 முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவில் 66.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது


பிரபல கிரிக்கெட் வீரரும், தேர்தல் ஆணையத்தின் தேசிய தூதருமான சச்சின் டெண்டுல்கர் உங்களைத் தொலைபேசியில் அழைத்து, நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தால் ஆச்சரியப்பட வேண்டாம். வாக்குப்பதிவை அதிகரிக்கும் நோக்கில், தேர்தல் ஆணையம், நடப்பு தேர்தல்களின் போது, வாக்காளர்களைக் கவரவும், அவர்களை ஊக்குவிக்கவும், பல்வேறு வழிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது.

அந்தவகையில், மக்களவைத் தேர்தல் 2024-ல் இதுவரை சுமார் 66.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நடப்பு பொதுத் தேர்தலின் முதல் நான்கு கட்டங்களில் சுமார் 451 மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

மேலும், 5, 6 மற்றும் 7 வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களில் அனைத்து வாக்காளர்களுக்கும் சரியான நேரத்தில் வாக்காளர் தகவல் சீட்டுகளை விநியோகிக்கவும், மக்கள் தொடர்பு நடவடிக்கைகளை மேம்படுத்தவும்,  அம்மாநிலங்களில் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் வேண்டுகோளின் பேரில், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பிரபலங்கள் கணிசமான அளவில் உற்சாகமாக பணியாற்றுவதைக் காண்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியுள்ளார். மேலும், அதிக வாக்குப்பதிவு, இந்திய வாக்காளர்களிடமிருந்து இந்திய ஜனநாயகத்தின் வலிமை குறித்த செய்தியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

ஜனநாயகத் திருவிழாவில் கலந்து கொண்டு விடுமுறை நாளாகக் கருதாமல், பெருமைக்குரிய நாளாகக் கருதி அனைத்து வாக்காளர்களும் திரளாக வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

வாக்காளர் விழிப்புணர்வு இயக்கங்கள் மற்றும் தொடர்புடையவர்களால் வாக்குப்பதிவை ஊக்குவிக்க பல்வேறு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, பிஎஸ்என்எல், பார்தி ஏர்டெல் லிமிடெட், ஜியோ டெலிகம்யூனிகேஷன், வோடபோன்-ஐடியா லிமிடெட் போன்ற தொலைத்தொடர்பு சேவை  நிறுவனங்கள் மூலம் அந்தந்த நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு மொபைல் பயனரையும்  வாக்குப்பதிவுக்கு இரண்டு / மூன்று நாட்களுக்கு முன்பும், வாக்குப்பதிவு நாளன்றும் கூட குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்பு, வாட்ஸ் அப் செய்தி மூலம் பிராந்திய மொழிகளில், வாக்களிக்க வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. 

Loksabha Election 2024 6th Phase: 39 சதவீத வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்... சராசரி சொத்து மதிப்பு ரூ.6 கோடி!

ஐபிஎல் போட்டிகளின் போது வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடப்பு ஐபிஎல் சீசனில் வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காக பிசிசிஐயுடன் தேர்தல் ஆணையம் இணைந்துள்ளது. கிரிக்கெட் போட்டிகளின் போது வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் பாடல்கள் பல்வேறு மைதானங்களில் ஒலிபரப்பப்படுகின்றன.

அத்துடன், முகநூல் பயனர்களுக்கு வாக்குப்பதிவு நாள் அன்று  தகவல் அனுப்பப்படுகிறது. வாக்காளர் விழிப்புணர்வு அறிவிப்புகள் அனைத்து ரயில் நிலையங்களிலும் ஒலிபரப்பப்படுகிறது.   விமானத்திற்குள் வாக்களிப்பு  குறித்த தகவல் அறிவிக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் விழிப்புணர்வு படங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் பாடல் சீரான இடைவெளியில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

குடியரசுத் தலைவர், குடியரசு துணைத்தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போன்ற அரசியலமைப்பு செயல்பாட்டாளர்களின் வேண்டுகோள் உட்பட பல்வேறு குறும்படங்களை தூர்தர்ஷன் தயாரித்துள்ளது.

ரேபிடோ பைக் செயலி வாக்காளர்களை வாக்களிக்க இலவச பயணம் மூலம் ஊக்குவித்து வருகிறது. பணம் செலுத்தும் செயலி போன்பே தங்கள் செயலியில் வாக்காளர் விழிப்புணர்வு செய்தியை ஒருங்கிணைத்து வாக்காளர்களை தீவிரமாக ஊக்குவித்து வருகிறது. சுமோட்டோ, ஸ்விகி போன்ற உணவு விநியோக நிறுவனங்கள் தங்கள் தளங்கள் மற்றும் சமூக ஊடக நடவடிக்கைகள் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு செய்திகளை பரப்புவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.

click me!