மக்களவைத் தேர்தல் 2024 ஆறாம் கட்டவாக்குப்பதிவில் போட்டியிடும் 39 சதவீத வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் என தெரியவந்துள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏற்கனவே நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், வருகிற 20ஆம் தேதி ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இறுதிகட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி முடிந்து ஜூன் 4ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் 2024 ஆறாம் கட்டவாக்குப்பதிவில் போட்டியிடும் 39 சதவீத வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் எனவும், அவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.6.21 கோடி எனவும் தெரியவந்துள்ளது.
மக்களவைத் தேர்தல் 2024க்கான ஆறாம் கட்ட வாக்குப்பதிவு வருகிற 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. மொத்தம் 7 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதன் மீதான பரிசீலனை முடிந்த நிலையில், மேற்கண்ட விவரம் தெரியவந்துள்ளது.
அதன்படி, மக்களவைத் தேர்தலில் ஆறாவது கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் சுமார் 39 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் எனவும், அவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.6.21 கோடி எனவும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் 6ஆவது கட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில், குருக்ஷேத்ரா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நவீன் ஜிண்டால் அதிகபட்சமாக தனது சொத்து மதிப்பு ரூ.1,241 கோடி என குறிப்பிட்டுள்ளார். அவரைத்தொடர்ந்து பாஜக வேட்பாளர்களான சந்துருப் மிஸ்ரா ரூ.482 கோடி, சுஷில் குப்தா ரூ.169 கோடி என தங்களது சொத்து மதிப்பை அறிவித்துள்ளனர்.
மேலும் ஆறாவது கட்டத்தில் போட்டியிடும் 866 வேட்பாளர்களில் 338 வேட்பாளர்கள் அதாவது 39 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் எனவும், அவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.6.21 கோடி எனவும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.
Lok Sabha Election 2024 வாரணாசி பாஜக வேட்பாளர் பிரதமர் மோடி சொத்து மதிப்பு என்ன?
பிஜூ ஜனதாதளம் கட்சியை சேர்ந்த அனைத்து 6 வேட்பாளர்களும், ராஷ்ட்ரீய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலா 4 வேட்பாளர்களும், பாஜகவின் 51 வேட்பாளர்களில் 48 (94 சதவீதம்) வேட்பாளர்களும், சமாஜ்வாதி கட்சியின் 12 வேட்பாளர்களில் 11 (92 சதவீதம்) வேட்பாளர்களும், காங்கிரஸின் 25 வேட்பாளர்களில் 20 பேர் (80 சதவீதம்), ஆம் ஆத்மி கட்சியின் 5 வேட்பாளர்களில் 4 பேர் (80 சதவீதம்), மற்றும் ஏஐடிசியின் 9 வேட்பாளர்களில் 7 (78 சதவீதம்) வேட்பாளர்களும் தங்களிடம் ரூ.1 கோடிக்கு மேல் சொத்து உள்ளதாக அறிவித்துள்ளனர்.
குறைந்த சொத்து மதிப்பு கொண்ட வேட்பாளர்களின், ரோஹ்டக் மக்களவைத் தொகுதியின் சுயேச்சை வேட்பாளர் மாஸ்டர் ரந்தீர் சிங் வெறும் ரூ.2 மதிப்புள்ள சொத்துகள் தன்னிடம் இருப்பதாக அறிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து பிரதாப்கர் தொகுதியில் போட்டியிடும் SUCI(C) வேட்பாளர் ராம் குமார் யாதவ் தன்னிடம் ரூ.1,686 மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக தனது பிரமாணப்பத்திரத்தில் அறிவித்துள்ளார்.
சுமார் 411 (47 சதவீதம்) வேட்பாளர்கள் தங்களுக்கு கடன் இருப்பதாகவும், 866 வேட்பாளர்களில் 180 பேர் (21 சதவீதம்) தங்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் உள்ளதாகவும், 866 பேரில் 141 பேர் (16 சதவீதம்) தங்களுக்கு எதிராக கடுமையான குற்ற வழக்குகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.