மக்களவைத் தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி சுக்குநூறாக உடைந்து விடும் என பிரதமர் மோடி ஆருடம் தெரிவித்துள்ளார்
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏற்கனவே நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், வருகிற 20ஆம் தேதி ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இறுதிகட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி முடிந்து, ஜூன் 4ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
தேர்தலையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில், உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தார். ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, இந்த இளவரசர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் வெளிநாடு செல்வார்கள் என்று அவர் கூறினார்.
INDIA கூட்டணி சுக்குநூறாக உடைந்து விடும்.. ராகுல் காந்தியை விமர்சித்து பேசிய பிரதமர் மோடி. https://t.co/MQYXrS5rqN
— Asianetnews Tamil (@AsianetNewsTM)
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை சுட்டிக்காட்டி பேசிய பிரதமர் மோடி, “சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் இளவரசர்களுக்கு, நாட்டின் வளர்ச்சி என்பது உள்ளூரில் உள்ள குழந்தைகள் கில்லி-தண்டா விளையாடுவது போன்றது. இந்த இளவரசர்கள் அரண்மனைகளில் பிறந்தவர்கள். கடினமாக உழைக்கும் பழக்கம் இல்லை. அதனால்தான் வளர்ச்சி தானே நடக்கும் என்று சொல்கிறார்கள்.” என்றார்.
சிஏஏ சட்டத்தின் கீழ் முதற்கட்டமாக இந்திய குடியுரிமை சான்றிதழ்களை வழங்கிய மத்திய அரசு!
“இந்தியா தன்னிறைவு பெறும் என்று நினைக்கிறார்கள், எப்படி என்று யாராவது கேட்டால் வேறு மாதிரி பேசுகிறார்கள். புதிய நெடுஞ்சாலைகள் தானாக உருவாகும் என்று நினைக்கிறார்கள். இந்தியாவில் இருந்து வறுமை ஒழிந்துவிடும் என்று நினைக்கிறார்கள். எப்படி என்று யாராவது கேட்டால் தெரியவில்லை.” என பிரதமர் மோடி விமர்சித்தார்.
அமேதியில் இருந்து சென்ற அவரை, ரேபரேலி மக்களும் தட்டிக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பவுள்ளனர் என ராகுல் காந்தியை பிரதமர் மோடி சாடினார். மேலும், “தங்கக் கரண்டியுடன் பிறந்த குழந்தைகளுக்கு நாட்டை நடத்துவது விளையாட்டல்ல. உங்களால் முடியாது. ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு மோடி அரசு நிச்சயம் அமையும். அதன்பிறகு இந்தியா கூட்டணி சுக்குநூறாக உடைந்து விடும்.” என பிரதமர் மோடி ஆருடம் தெரிவித்தார்.