நீதிமன்ற அனுமதி இன்றி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் யாரையும் கைது செய்யக்கூடாது என அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களை காவலில் வைப்பதற்கு கடுமையான வரம்புகளை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி, நீதிமன்ற அனுமதி இன்றி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் (PMLA) யாரையும் கைது செய்யக்கூடாது என அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு சிறப்பு நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்டவரை காவலில் எடுக்க விரும்பினால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்ய வேண்டும் குற்றம் சட்டப்பட்டவரை அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்ப வேண்டுமா? வேண்டாமா? என சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்யும் எனவும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பிறகு, சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டம் (பிஎம்எல்ஏ - PMLA) பிரிவு 19 இன் கீழ் அமலாக்க இயக்குநரகம் குற்றம் சட்டப்பட்டவரை கைது செய்ய முடியாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. குற்றம் சட்டப்பட்டவரை கைது செய்து காவலில் வைக்க வேண்டுமானால் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து அனுமதி பெற வேண்டும் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளனர்.
“பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ - PMLA) பிரிவு 4ன் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பிறகு, பிரிவு 44 இன் கீழ் ஒரு புகாரின் அடிப்படையில், புகாரில் குற்றம் சாட்டப்பட்ட நபரைக் கைது செய்ய அமலாக்கத்துறை பிரிவு 19 இன் கீழ் அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது. சம்மன்களுக்குப் பிறகு ஆஜரான குற்றம் சாட்டப்பட்டவரை அதே குற்றத்தின் மேலதிக விசாரணைக்காக அமலாக்கத்துறையினர் கைது செய்து காவலில் எடுக்க விரும்பினால் சிறப்பு நீதிமன்றத்தில் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.” என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
Lok Sabha Election 2024 வாரணாசி பாஜக வேட்பாளர் பிரதமர் மோடி சொத்து மதிப்பு என்ன?
வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் நில மோசடியில் தொடர்புடைய பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பலருக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பிறகும் கூட, பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீனுக்காக கடுமையான சவால்களை சந்திக்க வேண்டுமா என்பது குறித்த தீவிர விசாரணைக்கு பிறகு இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. முன்னதாக, இந்த வழக்கு விசாரணையின்போது, புகார் அளித்தவுடன் ஒருவரை அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது என்று நீதிபதி அபய் எஸ் ஓகா தெரிவித்தார்.
பணமோசடி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க இரண்டு கூடுதல் நிபந்தனைகளை விதிக்கும் சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் (பிஎம்எல்ஏ - PMLA) பிரிவு 45(1)ஐ உச்ச நீதிமன்றம் செல்லாததாக்கியது. இருப்பினும், PMLA சட்டத்தை திருத்திய மத்திய அரசு அந்த விதியை மீண்டும் அமல்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.