உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு குறித்து அவரது வேட்புமனுவில் இருந்து தெரிய வந்துள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏற்கனவே நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், வருகிற 20ஆம் தேதி ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இறுதிகட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி முடிந்து ஜூன் 4ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
அந்த வகையில், மொத்தம் 80 தொகுதிகளை கொண்ட நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அம்மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் 2014ஆம் ஆண்டு முதல் போட்டியிட்டு வெற்றி பெற்று வரும் பிரதமர் மோடி இந்த முறையும் வாரணாசி தொகுதியிலேயே போட்டியிடுகிறார். இதற்காக அவர் தனது வேட்புமனுவை வாரணாசி ஆட்சியரான தமிழ்நாட்டை சேர்ந்த ராஜலிங்கத்திடம் நேற்று முன் தினம் தாக்கல் செய்தார்.
undefined
இந்த நிலையில், சொத்து மதிப்பு குறித்து வேட்புமனு சமர்ப்பின்போது, அவர் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் இருந்து தெரிய வந்துள்ளது. அதன்படி, பிரதமர் நரேந்திர மோடிக்கு மொத்தம் ரூ.3 கோடிக்கு மேல் சொத்து உள்ளது. ஆனால் சொந்தமாக நிலம், வீடு, கார் எதுவும் இல்லை என்று அவர் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது பிரமாணப் பத்திரத்தில் மொத்தம் ரூ.3.02 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.2.86 கோடி மதிப்புள்ள நிலையான வைப்புத்தொகை வைத்துள்ள பிரதமர் மோடியின் தனது கையில் ரூ.52,920 ரொக்கம் இருப்பதாகவும், காந்திநகர் மற்றும் வாரணாசியில் உள்ள இரண்டு வங்கிக் கணக்குகளில் ரூ.80,304 உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேசிய சேமிப்புச் சான்றிதழ்களில் ரூ.9.12 லட்சத்தை பிரதமர் மோடி முதலீடு செய்துள்ளார். மேலும், ரூ.2.68 லட்சம் மதிப்புள்ள நான்கு தங்க மோதிரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், 2018-19ஆம் ஆண்டில் ரூ.11.14 லட்சமாக இருந்த அவரது வருமானம் 2022-23ஆம் ஆண்டில் ரூ.23.56 லட்சமாக உயர்ந்துள்ளது.
1978ஆம் ஆண்டில் டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தையும், 1983ஆம் ஆண்டில் குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தையும் முடித்ததாக பிரதமர் மோடி தனது பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார். தன் மீது கிரிமினல் வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கு 7ஆவது கட்டத்தில் ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.