சிகிச்சை மையத்திலும் அசைவ வேட்டையாடும் T23 புலி… உடல்நிலையில் முன்னேற்றம் என மருத்துவர்கள் தகவல்..!

By manimegalai aFirst Published Oct 18, 2021, 10:15 AM IST
Highlights

காலை உணவாக உயிருடன் அனுப்பிவைக்கப்பட்ட கோழிகள் அனைத்தையும் வேட்டையாடிய டி23 புலி, மதியத்திற்கு ஆறு கிலோ மாட்டிறைச்சியை சாப்பிட்டு ஏப்பம் விட்டது.

காலை உணவாக உயிருடன் அனுப்பிவைக்கப்பட்ட கோழிகள் அனைத்தையும் வேட்டையாடிய டி23 புலி, மதியத்திற்கு ஆறு கிலோ மாட்டிறைச்சியை சாப்பிட்டு ஏப்பம் விட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மசினகுடி, தேவன் எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் நால்வரை அடித்துக்கொன்ற டி23 புலியை வனத்துறையினர் 21 நாள் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடித்தனர். புலியின் உடலில் காயங்கள் இருந்ததால் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள வனவிலங்கு மீட்பு மற்றும் புத்துணர்வு மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

முதல் நாளில் புலியின் பற்கள், உடம்புகளில் ஏகப்பட்ட காயங்கள் இருந்ததை உறுதிசெய்த மருத்துவர்கள், அதனை பெரிய கூண்டில் அடைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தசை உயிரணுக்க சிதைவு நோய் மற்றும் முன்னங்காலில் இருந்த வீக்கத்திற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டி23 புலிக்காக பிரத்யேக அறை உருவாக்கப்பட்டு அதனருகே சிறிய வனப்பகுதியும் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் டி23 புலியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் புலிக்கு காலை உணவாக உயிருடன் உள்ள கோழிகள் கூண்டுக்குள் விடப்பட்டன. அதை அனைத்தையும் டி23 புலி வேட்டையாடி தின்றது. மதிய உணவாக வழங்கப்பட்ட ஆறு கிலோ மாட்டிறைச்சியையும் புலி முழுமையாக உட்கொண்டது. தீவிர சிகிச்சையின் பலனாக டி23 புலி நன்றாக உணவுகளை உட்கொள்வதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். புலிக்கு முழுமையாக குணமடைந்த பின்னர் அதை வனத்திற்குள் விடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.

click me!