கர்நாடகாவின் முதல்வர் யார், துணை முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டதாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ சித்தராமையா, டி.கே சிவகுமார் இருவரும் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து. இருவருமே முதலமைச்சராக தகுதி உடையவர்கள். இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பல கட்ட ஆலோசனைகளை நடத்தினர். இறுதியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடக முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்துள்ளார். அதன்படி கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளார். டி.கே சிவக்குமார் துணை முதலமைச்சராக இருப்பார்.
டி.கே சிவகுமார் கர்நாடக காங்கிரஸ் தலைவராக தொடர்ந்து இருப்பார். இன்று மாலை பெங்களூருவில் நடைபெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏ கூட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். நாளை மறுதினம் (20.5.2023) பதவியேற்பு விழா நடைபெறும். அதில், கர்நாடக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றுக்கொள்வார்கள். காங்கிரஸ் கட்சிக்கு ஒருமித்த கருத்தில்தான் நம்பிக்கை இருக்கிறது. சர்வாதிகாரத்தில் அல்ல” என்று தெரிவித்தார்.
undefined
இதையும் படிங்க : மத்திய அமைச்சரவை மாற்றம்.. கிரண் ரிஜிஜுவுக்கு புதிய துறை ஒதுக்கீடு.. புதிய சட்ட அமைச்சர் யார் தெரியுமா?
கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் முதலமைச்சர் யார் என்பது தொடர்ந்து மர்மமாகவே இருந்து வந்தது. முதலமைச்சர் பதவிக்கு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது. சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவரும் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தனித்தனியாக சந்தித்து பேசினர். மேலும் இரு தலைவர்களும் ராகுல்காந்தியையும் தனித்தனியே சந்தித்தனர்.
சித்தராமையாவுக்கு முதலமைச்சர் பதவியும், டி.கே சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. மேலும் 2.5 ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த 2.5 ஆண்டுகள் டி.கே சிவக்குமாரும் முதலமைச்சராக இருப்பார்கள் என்று கூறப்பட்டது. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி, கர்நாடக முதலமைச்சர் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : துணை முதலமைச்சர் பதவிக்கு ஒப்புக்கொண்டது ஏன்? டி.கே சிவக்குமார் விளக்கம்