
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கமல் நாத்தை துப்பாக்கியால் குறிவைத்த போலீஸ் கான்ஸ்டபில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மத்தியப் பிரதேச மாநிலம், சிந்த்வாரா தொகுதி எம்.பி.யாக இருப்பவர் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கமல் நாத். இவர் நேற்று தனது தொகுதிக்கு சென்றுவிட்டு, சிந்த்வாராவில் உள்ள விமானப்படைத் தளத்தில் இருந்து சிறிய ரக விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஒருவர் துப்பாக்கியால் விமானத்தில் அமர்ந்திருந்த கமல் நாத்தை நோக்கி சந்தேகத்துக்கு உரிய வகையில் குறிவைத்தார் . இதை கமல்நாத்தின் தனிப்பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, உடனடியாக அந்த போலீஸ் செயல்பாட்டை தடுத்து நிறுத்தி, அவரை பிடித்துச் சென்றனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் 31வயது நிரம்பிய ரத்னீஷ் பவார் என்பது தெரியவந்தது. கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இந்த விமானப்படைத் தளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். ரத்னீஷ் மன அழுத்தத்தில் இருந்தாரா என்பது குறித்து மருத்துவ ஆய்வுக்கு அனுப்பப்பட்டார்.
இதற்கிடையே போலீஸ் கூடுதல் எஸ்.பி. நீரஜ் சோனி கூறுகையில், “ முதல் கட்ட விசாரணையில் கான்ஸ்டபிள் ரத்னீஷ் கமல்நாத்துக்கு எதிராக துப்பாக்கியால் குறிவைக்கவில்லை என்றார். தான் என்ன செய்தோம் என்பதையே மறந்துவிட்டு இருக்கிறார். ஆனால், அவரின் செயல்பாடுகள் அப்போது கமல்நாத்தை நோக்கி சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்ததால், சக பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பிடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, ரத்னீஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்’’ எனத் தெரிவித்தார்.