
போர் அல்லது தீவிரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்தாலும் ராணுவ வீரர்கள், போலீசார் ஆகியோரை ‘தியாகி’ என்று அழைக்க முடியாது. அவ்வாறு கூற பாதுகாப்பு துறை சட்டத்தில் அதிகாரத்தில் இடமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அவ்வாறு பலியாகும் ராணுவ வீரர்கள், போலீசாரை, ‘போரில் உயிர் நீத்தோர்’, அல்லது ‘பல்வேறு நடவடிக்கையில்(ஆப்ரேஷன்) உயிரழந்தோர்’ என்று மட்டுமே குறிப்பிட முடியும் என்று மத்திய தகவல் ஆணையத்தில் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
‘தியாகி’ விளக்கம்
‘தியாகி’ என்ற வார்த்தைக்கு, சட்டப்படி மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி என்ன விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது, அந்த வார்த்தையை தவறாக பயன்படுத்தாதவாறு கட்டுப்படுத்த என்ன விதமான சட்டவிதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்பதை அறிய தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ஒருவர், மத்திய உள்துறை அமைச்சகத்தில் மனுச் செய்தார்.
விளக்கம்
இந்த மனு உள்துறை அமைச்சகத்தின் பல்வேறு அதிகாரிகளுக்கும், பாதுகாப்பு துறை அமைச்சகத்துக்கும் அனுப்பிவைக்கப்பட்டு விளக்கம் பெற்று வழங்கப்பட்டது. ஆனால், மனுதாரருக்கு அளிக்க விளக்கம் மனநிறைவைத் தரவில்லை. இதையடுத்து, மத்திய தலைமை தகவல் ஆணையத்தை அனுகிய மனுதாரர் மீண்டும் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டார்.
இதையடுத்து, மத்திய பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளை அழைத்து தகவல் ஆணையர் விளக்கம் கேட்டார். அந்த விளக்கம் குறித்து தகவல் ஆணையர் யசோவர்தன் ஆசாத் கூறியதாவது-
தியாகி இல்லை
பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் அதிகாரத்தில், ‘தியாகி’ என்ற வார்த்தை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்படுவது கிடையாது. போர், தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடையும் ராணுவ வீரர்கள், போலீசாரை தியாகி என்று அழைக்க முடியாது. அவர்களை ‘போரில் உயிர்நீத்தவர்கள்’ என்று மட்டுமே அழைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.
உள்துறை அமைச்சகம்
அதேபோல, உள்துறை அமைச்சகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், ‘தியாகி’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதில்லை, அதற்கு பதிலாக ‘ பல்வேறு நடவடிக்கையில் பலியானவர்கள்’ என்று தெரிவித்தனர்.