
குஜராத் தேர்தல் பிரசாரம் தொடர்பாக பாகிஸ்தான் தூதர், முன்னாள் அமைச்சருடன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சதித்திட்டம் தீட்டினர் என்று பிரதமர் மோடி பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று மாநிலங்கள் அவை தொடங்கிய முதல்நாளான ேநற்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தாமதமாக நேற்று தொடங்கியது. இது, வரும் ஜனவரி 5-ந்தேதிவரை நடக்க உள்ளது.
மன்னிப்பு கோர வேண்டும்
மாநிலங்கள் அவை தொடங்கியதும் குஜராத் தேர்தலில் பிரதமர் மோடி பேசியதை குறிப்பிட்டு, அவர் மன்னிப்பு கோர வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி ஆகியோர் மீது மோடி கூறிய குற்றச்சாட்டுகள் தீவிரமானது. ஆதலால், விதி 267ன்கீழ் அவையின் அலுவல்களை ஒத்திவைத்து, இது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
ஆனால், இதற்கு மாநிலங்கள் அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்.
காங்.மன்னிப்பு
இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்த் குமார் பேசுகையில், “ பாகிஸ்தான் அதிகாரிகளுடன் சேர்ந்து ஆலோசனை நடத்தியதற்காக காங்கிரஸ் தலைவர்கள் மன்னிப்பு கோர வேண்டும்’’ என்றார்.
அமளி
இதனால், காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆக்கர் பெர்ணான்டஸ், ஷாம்செர் சிங் துலோ, ரேனுகா சவுத்ரி, சஞ்சய் சிங் உள்ளிட்டோர் அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தலைவர் சரத் யாதவ், அலி அன்வர் எம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு ஆளும் பா.ஜனதா எம்.பி.க்களும் குரல் எழுப்பியதால் கடும் குழப்பம் நிலவியது.
அனுமதிக் முடியாது
அப்போது பேசிய சபாநாயகர் வெங்கையா நாயுடு, “ தகுதிநீக்கம் செய்யப்பட்ட 2 எம்.பி.க்களுக்கும் விளக்கம் அளிக்க போதுமான அவகாசம் அளிக்கப்பட்டு, அதன்பின் நீக்கப்பட்டுள்ளனர். அவைத் தலைவரின் முடிவு குறித்து விவாதிக்க அனுமதியில்லை. அமருங்கள்’’ என்றார்.
ஆனால், அவையின் மையப்பகுதியில் நின்று கொண்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்துகோஷமிட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
தீவிரமானது
அதன்பின் நண்பகலில் கேள்வி நேரத்துக்கு மீண்டும் அவை கூடியது, அப்போது, மாநிலங்கள் அவையின எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான குலாம் நபி ஆசாத் பேசுகையில், “ குஜராத் தேர்தலில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் மீது, கூறிய குற்றச்சாட்டுகளை எழுப்பினார். அவை அலுவல்களை ஒத்திவைத்து, இது குறித்து விவாதிக்க வேண்டும்.
அரசுக்கு மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளுக்கும் இந்த விவகாரம் மிக முக்கியமானது. முன்னாள் பிரதமர், முன்னாள் துணைஜனாதிபதி மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. முன்னாள் தூதர்கள், முன்னாள் வெளியுறவு செயலாளர்கள், ஆகியோர் பாகிஸ்தானுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது சாதாரண விஷயம் அல்ல’’ என்றார்.
ஒத்திவைப்பு
ஆனால், இதற்கு அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அனுமதி அளிக்கவில்லை. இதனால் மீண்டும் அவையில் கூச்சல் எழுந்ததால் அவையை நண்பகல் 2.30 மணி வரை ஒத்திவைத்தார்.
அதன்பின், இரு தனிநபர் மசோதாக்கள் அவையில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், அப்போதும் எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பி, கூச்சலிட்டதால், அவை நாள் முழுவதும் ஒத்திவைத்து துணைத்தலைவர் பி.ஜே. குரியன் உத்தரவிட்டார்.
மக்களவை
முன்னதாக மக்களவே நேற்று காலையில் தொடங்கியதும், மறைந்த முன்னாள் எம்.பி.க்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அவையை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.