
எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக கோளாறுக்காக சிகிச்சை பெற்று வரும் தமக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
சிறுநீரக பாதிப்பு காரணமாக கடந்த 7-ஆம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய வெளியறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ நிபுணர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து, தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், சிறுநீரக செயலிழப்பு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தமக்கு டயாலிசஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கான பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
64 வயதாகும் சுஷ்மா ஸ்வராஜ், 20 ஆண்டுகளுக்கு மேலாக சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.