அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமின் நீட்டிப்பு மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

By Manikanda Prabu  |  First Published May 29, 2024, 12:24 PM IST

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமின் நீட்டிப்பு மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது


டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்தது. இந்த வழக்கில் தன்னுடைய கைதை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் ஜெக்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பை மீறி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த 10ஆம் தேதி இடைக்கால ஜாமின் வழங்கியது. முதல்வருக்கான பணிகளை கெஜ்ரிவால் செய்ய தடை விதித்த உச்ச நீதிமன்றம், ஜூன் 2ஆம் தேதி அவர் சரணடையுமாறு உத்தரவிட்டது.

Latest Videos

இதனிடையே, இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் கடுமையான உடல்நலக் கவலைகளை மேற்கோள் காட்டியுள்ள அவர், 7 கிலோ எடை இழப்பு, கீட்டோன் அளவு உயர்வு, PET-CT ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

சீன ஆக்கிரமிப்பு... மீண்டும் சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்ட மணிசங்கர் ஐயர்!

இந்த மனுவை அவசரமாக விசாரிக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. ஆனால், இடைக்கால ஜாமினை ஒரு வாரம் நீட்டிக்கக் கோரிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்ற விடுமுறை கால அமர்வு மறுப்பு தெரிவித்து விட்டது.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமின் நீட்டிப்பு மனுவை விசாரணைக்கு பட்டியலிட மறுப்பு தெரிவித்து அதனை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. விசாரணை நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கும்படி கூறி உச்ச நீதிமன்ற பதிவாளர் கெஜ்ரிவாலின் ஜாமின் நீட்டிப்பு மனுவை நிராகரித்துள்ளார். ஏற்கனவே வழங்கப்பட்ட ஜாமீன் என்பது ஜூன் ஒன்றாம் தேதி வரை மட்டும் தான் என்பதை சுட்டிக்காட்டி உள்ள பதிவாளர் தேவைப்படும் பட்சத்தில் விசாரணை நீதிமன்றத்தில் வழக்கமான ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

தற்போதைய உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ஜூன் 2ஆம் தேதியன்று அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைந்து திகார் சிறைக்கு திரும்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!