சீனர்கள் இந்தியாவை ஆக்கிரமித்ததாக கூறிய சர்ச்சை கருத்து தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் மன்னிப்பு கோரியுள்ளார்
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் ஐயர் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அந்த வகையில், பாகிஸ்தானை மதிக்கவில்லை என்றால் அவர்கள் இந்தியா மீது அணுக்குண்டைப் போட்டுவிடுவார்கள் என்று அண்மையில் பேட்டியளித்து சர்ச்சையில் சிக்கினார்.
இந்த நிலையில், 1962ஆம் ஆண்டில் சீனர்கள் இந்தியாவை ஆக்கிரமித்ததாக மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை மணிசங்கர் ஐயர் தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்கு பாஜக, காங்கிரஸ் கட்சியினர் எதிர்வினையாற்றியதையடுத்து, தனது தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
மணிசங்கர் ஐயரின் கருத்து கட்சியின் கருத்து இல்லை என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், மணிசங்கர் அய்யர் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டதாகவும், அவரது வயதுக்கு ஏற்ப சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.ஆனால், 2020ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவுக்குள் சீனர்கள் ஊடுருவியது தொடர்பாக பிரதமர் மோடி மீது ஜெய்ராம் ரமேஷ் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
வெளிநாட்டு நிருபர்கள் கிளப்பில் நடந்த நேருவின் முதல் ஆட்சேர்ப்பு என்ற புத்தக வெளியீட்டின் போது பேசிய மணிசங்கர் ஐயர், “அக்டோபர் 1962 இல், சீனர்கள் இந்தியா மீது படையெடுத்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது.” என்று கூறினார். இந்த கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, “'சீன படையெடுப்பு' என்பதற்கு முன்பு 'குற்றம் சாட்டப்பட்ட' என்ற வார்த்தையை தவறாகப் பயன்படுத்தியதற்காக நான் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.” என மணிசங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 1962இல் சீனப் படையெடுப்பை ‘குற்றச்சாட்டு’ என்று குறிப்பிட்டு திருத்த முயற்சிக்கும் வெட்கக்கேடான செயல் என மணிசங்கர் ஐயர் மீது பாஜகவின் தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் அமித் மால்வியா குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
“சீனர்களுக்கு ஆதரவாக UNSC யில் இந்தியாவின் நிரந்தர இடம் என்ற கோரிக்கையை நேரு கைவிட்டார், ராகுல் காந்தி ரகசிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், ராஜீவ் காந்தி அறக்கட்டளை சீன தூதரகத்தின் நிதியை ஏற்றுக்கொண்டது. சோனியா காந்தியின் ஐக்கிய முற்போக்கு அரசு சீனப் பொருட்களுக்கு இந்தியச் சந்தையைத் திறந்து விட்டது. இதனால், இந்திய சிறுகுறு நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டன. தற்போது, 38,000 சதுர கிலோமீட்டர் இந்திய நிலப்பரப்பை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள சீனர்களின் ஆக்கிரமிப்பை திருத்தி எழுத மணிசங்கர் ஐயர் முயற்சிக்கிறார்.” என அமித் மால்வியா தெரிவித்திருந்தார்.