பிரதமர் மோடி கன்னியாகுமரி வருவதற்கான காரணம் குறித்து தெரியவந்துள்ளது
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. ஏற்கனவே 6 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், இறுதி கட்ட வாக்குப்பதிவு வருகிற ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாக உள்ளன. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி வருகிற 30ஆம் தேதி கன்னியாகுமரி வரவுள்ளார். டெல்லியில் இருந்து விமானத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகிறார். பின்னர், படகு மூலம் கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்லும் பிரதமர் மோடி, மே 30ஆம் தேதி மாலை முதல் ஜூன் 1ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு விவேகானந்தர் மண்டபத்தில் தங்கியிருந்து அங்குள்ள தியான மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, பிரதமர் மோடி கன்னியாகுமரி வருவதற்கான காரணம் குறித்து தெரியவந்துள்ளது. அதாவது, ஒவ்வொரு தேர்தல் பிரசாரங்களின் முடிவிலும் பிரதமர் மோடி ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் பிரசார முடிவின்போது, அவர் கேதார்நாத்திற்குச் சென்றிருந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் பிரசார முடிவின்போது, சிவாஜியின் பிரதாப்கரை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
அதன் தொடர்ச்சியாக, 2024 மக்களவைத் தேர்தல் பிரசார முடிவின்போது கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி, விவேகாந்தனர் பாறைக்கு சென்று, விவேகானந்தர் தியானம் செய்த அதே இடத்தில் மே 30ஆம் தேதி மாலை முதல் ஜூன் 1ஆம் தேதி மாலை வரை இரவு பகலாக தியானம் மேற்கொள்ளவுள்ளார்.
சுவாமி விவேகானந்தர் பாரத மாதாவை தரிசனம் செய்த இடம் கன்னியாகுமரி ஆகும். இந்த பாறை சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கௌதம புத்தரின் வாழ்வில் சாரநாத் சிறப்பு இடத்தைப் பெற்றிருப்பதைப் போல, சுவாமி விவேகானந்தரின் வாழ்வில் இந்தப் பாறையும் அதே இடத்தைப் பெற்றிருப்பதாக மக்கள் நம்புகிறார்கள்.
நாடு முழுவதும் அலைந்து திரிந்த சுவாமி விவேகாந்தனர், கன்னியாகுமரி வந்து இந்த பாறையில் தங்கியிருந்து 3 நாட்கள் தியானம் செய்து, வளர்ந்த இந்தியாவுக்கான பார்வையை அடைந்தார். அதே இடத்தில் பிரதமர் மோடியும் தியானம் செய்வது, விவேகானந்தரின் விக்சித் பாரத் பார்வையை உயிர்ப்பிப்பதில் அவரது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. பார்வதி தேவியும் அதே இடத்தில் பகவான் சிவனுக்காகக் காத்திருந்தபடி ஒரே காலில் தியானம் செய்ததாக நம்பப்படுகிறது.
இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் இடமாகவும் திகழ்கிறது. இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் ஆகிய முக்கடலின் சந்திப்புப் புள்ளியாக விளங்கும் கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி செல்வது தேச ஒற்றுமைக்கான சமிக்ஞையை வழங்குவதாக கூறுகிறார்கள். தேர்தல் முடிந்த பிறகும் அவர் தமிழகத்திற்கு வருகை தருவது பிரதமரின் ஆழ்ந்த அர்ப்பணிப்பையும் தமிழகத்தின் மீதான அன்பையும் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.