மணிப்பூரில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளை நிலைநிறுத்த வேண்டும் என்ற குகி சமூகத்தினரின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது
மணிப்பூரில் தொடரும் இனக்கலவரங்களுக்கு மத்தியில் தங்களது பாதுகாப்பிற்காக இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளை அனுப்ப வேண்டும் என்ற குகு பழங்குடியின மக்களின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. அப்போது, சில மைதேயி குழுவின் ஆதரவு அமைப்புகள் வன்முறைக்குப் பின்னால் இருப்பதாகக் குற்றம் சாட்டி குகி பழங்குடியினரின் பாதுகாப்பிற்காக படைகளை அனுப்ப உத்தரவிடுமாறு மூத்த வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், “இந்திய இராணுவத்தை நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றத்தை நீங்கள் கேட்கிறீர்கள். கடந்த 70 ஆண்டுகால நமது நீதிமன்ற வரலாற்றில், ராணுவத்தை எதனையும் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தவில்லை. ஜனநாயகத்தின் மிகப் பெரிய அடையாளம் ஆயுதப் படைகள் மீதான சிவிலியன் கட்டுப்பாட்டாகும். அதை மீறக்கூடாது.” என்றார்.
மணிப்பூரில் மேலும் தாக்குதல்களை தடுக்க பாதுகாப்பு வழங்குவது என்பது நிர்வாக அதிகாரத்தின் கீழ் வரும் என சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திசூட், மற்றும் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, மக்களின் உயிர் மற்றும் சொத்துக்கள் மீதான பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அம்மாநில அரசை வலியுறுத்தியது.
பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் பிரதமர் மோடி: பயணத்திட்டம் இதுதான்!
இந்த நீதிமன்றம், நிர்வாக அதிகாரங்களில் தலையிட்டு, ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளை அனுப்புவது தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்குவது பொருத்தமாக இருக்காது என்று நாங்கள் கருதுகிறோம். இது மத்திய, மாநில அரசின் மேற்பார்வைக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய விஷயம் எனவும் உச்ச நீதிமன்ற அமர்வு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஒரு மாதத்திற்கு மேலாக கலவரம் நீடித்து வருகிறது. அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பழங்குடி சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை சமூகங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
முதன்முதலாக மாநிலத்தின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் இருக்கும் மைதேயி சமூக மக்களை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் கடந்த மே மாதம் 3ஆம் தேதி அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினர். இதில் இரு பிரிவினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது. மோதல் பல மாவட்டங்களுக்கு பரவி வன்முறை வெடித்தது. இதனால், தற்போது வரை மணிப்பூர் கலவர பூமியாக காட்சியளிக்கிறது.