பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் பிரதமர் மோடி: பயணத்திட்டம் இதுதான்!

By Manikanda Prabu  |  First Published Jul 12, 2023, 2:06 PM IST

பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக ஜூலை 13ஆம் தேதி பிரதமர் மோடி செல்லவுள்ளார்


பிரதமர் மோடி அண்மையில் 4 நாட்கள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகளுக்கு சென்று திரும்பினார். இந்த நிலையில், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக ஜூலை 13ஆம் தேதி பிரதமர் மோடி செல்லவுள்ளார். இரண்டு நாட்கள் பிரான்ஸ் நாட்டில் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, இந்தியாவுக்கு வரும் வழியில் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான அபுதாபியில் ஒருநாள் அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த பயணத்துக்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி ஜூலை 13,14ஆகிய தேதிகளில் அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். பின்னர் இந்தியாவுக்கு வரும் வழியில் ஜூலை 15ஆம் தேதி அபுதாபியில் அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

Tap to resize

Latest Videos

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி 2023 ஜூலை 13 முதல் 14 வரை பாரிஸ் பயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 14 ஆம் தேதி நடைபெறும் பாஸ்டில் தின அணிவகுப்பில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார். அதில், இந்திய முப்படைகளின் குழு பங்கேற்கவுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில், அவருக்கு இம்மானுவேல் மேக்ரான் அரசு சார்பிலான விருந்து மற்றும் தனிப்பட்ட இரவு விருந்தையும் அளிக்கவுள்ளார்.

ராகுல் காந்தி அவதூறு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்!

உலகப் புகழ்பெற்ற பிரான்ஸின் லோவுர் அருங்காட்சியகத்தில் பிரதமர் மோடிக்கு இம்மானுவேல் மேக்ரான் அரச விருந்து அளிக்கவுள்ளார். இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பயணத்தின் போது, பிரான்ஸ் பிரதமர் மற்றும் அந்நாட்டின் செனட் (மேலவை) மற்றும் தேசிய சட்டமன்றத்தின் (கீழ் அவை) தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.  மேலும், இந்திய மற்றும் பிரெஞ்சு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரெஞ்சு பிரமுகர்களுடன் தனித்தனியாக பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிரான்சில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளார்.

இந்த ஆண்டு இந்தியா-பிரான்ஸ் மூலோபாய கூட்டாண்மை அதன் 25 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில், பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணம் மூலோபாய, கலாச்சார, அறிவியல், கல்வி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு போன்ற பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் என தெரிகிறது.

பிரான்ஸ் பயணத்தி முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 15ஆம் தேதி அபுதாபி செல்கிறார். அபுதாபி பயணத்தின்போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

“இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே மூலோபாய கூட்டாண்மை சீராக வலுவடைந்து வருகிறது. ஆற்றல், கல்வி, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, ஃபின்டெக், பாதுகாப்பு மற்றும் கலாச்சாரம் போன்ற பல்வேறு களங்களில் இதை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிகளைக் கண்டறியும் வாய்ப்பாக பிரதமர் மோடியின் அபுதாபி பயணம் அமையும். உலகளாவிய பிரச்சினைகளில் ஒத்துழைப்பைப் பற்றி விவாதிக்கும் வாய்ப்பையும்  இந்த பயணம் ஏற்படுத்தும்.” என வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!