தேர்தல் பத்திரங்களின் சீரியல் எண்களை எஸ்பிஐ வங்கி வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தேர்தல் பத்திரத் திட்டத்தை பிப்ரவரி 15ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதுவரை வழங்கிய தேர்தல் பத்திரங்கள் குறித்த முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவும் எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 12ஆம் தேதி மாலை தேர்தல் பத்திர விவரங்களை எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்திடம் அளித்தது.
அத்துடன், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பிரமாண பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ வங்கி தாக்கல் செய்தது. அதில், “கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 22,030 பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 187 பத்திரங்களின் தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
undefined
அதன் தொடர்ச்சியாக, தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேற்று வெளியிட்டது. அதில் இரண்டு பட்டியல்கள் உள்ளன. முதல் பட்டியலில், தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்கள், தொகை மதிப்பு மற்றும் தேதிகளுடன் வெளியிடப்பட்டுள்ளன. இரண்டாவது பட்டியலில், அரசியல் கட்சிகளின் பெயர்கள், பத்திரங்களின் மதிப்புகள் மற்றும் அவை பணமாக்கப்பட்ட தேதிகள் உள்ளன. ஆனால், எந்த நிறுவனம் எந்தக் கட்சிக்கு நன்கொடை அளித்தது என்ற விவரங்கள் இடம் பெறவில்லை.
ரூபாய் நோட்டுகளில் உள்ளது போல தேர்தல் பத்திரங்களுக்கும் சீரியல் நம்பர் கொடுக்கப்பட்டிருக்கும். தற்போது வெளியாகி இருக்கும் பட்டியலில் தேர்தல் பத்திரங்களின் சீரியல் நம்பர்கள் இல்லை. இதனால் எந்த நிறுவனம் எந்தக் கட்சிக்கு நன்கொடை வழங்கியது என்பதைக் கண்டறிய முடியாத நிலை உள்ளது. சீரியல் எண்கள் இருந்தால், எந்த தனிநபர் அல்லது எந்த நிறுவனம், எந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை கொடுத்தது என்பதை ஒப்பிட்டு கண்டுபிடிக்க முடியும்.
தேர்தல் பத்திரங்கள்: ரிலையன்ஸ் உடன் தொடர்புடைய நிறுவனம் 3ஆவது பெரிய நன்கொடையாளர்!
இந்த நிலையில், தேர்தல் பத்திரங்களின் சீரியல் எண்களை எஸ்பிஐ வங்கி வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையில் 5 பேர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்கள் அனைத்தும் வெளியிடப்பட வேண்டும் என தெளிவான உத்தரவை எஸ்பிஐ வங்கிக்கு கொடுத்திருந்தோம். அப்படி இருக்கும்போது பெயர்கள், தேதி, எவ்வளவு தொகை உள்ளிட்டவைகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்களின் எண்கள் ஏன் கொடுக்கப்படவில்லை என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
பத்திரங்களின் பிரத்யேக எண்ணை ஏன் குறிப்பிடப்படவில்லை என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், தேர்தல் பத்திரத்தின் எண்கள் தான் அதனை வாங்குபவர்களையும், நன்கொடையைப் பெற்றவர்களையும் இணைக்கக் கூடியது. அதை அளித்தால்தான் விவரங்கள் முழுமை பெறும். எனவே, தேர்தல் பத்திரங்களின் சீரியல் எண்களை எஸ்பிஐ வங்கி வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 18 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
அத்துடன், தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை என்பது குறித்து அன்றைய தினம் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இன்றைய விசாரணையின்போது எஸ்பிஐ வங்கி தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகததற்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.