
நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் தங்கள் பதவிக்காலம் முடிந்த பின், ஆயுள் முழுவதும் ஓய்வூதியம் பெறுவதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவில், மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்கள் அவை எம்.பி.க்கள் தங்கள் பதவிக்காலம் முடிந்த பின் அவர்களுக்கு அரசு சார்பில் ஓய்வூதியம் உள்ளிட்ட சில சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இது அரசியமைப்புச் சட்டம் பிரிவு 14ல் கூறப்பட்டுள்ள சமத்துவ உரிமைக்கு எதிரானதாகும். எம்.பி.களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எந்த விதமான சட்டமும் இயற்றப்ப்படாத நிலையில், அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம்இல்லை.
ஆதலால், அந்த ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி ‘ லோக் பிரஹரி’ என்ற தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்து இருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜே. செலமேஸ்வர் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை,
மாநிலங்கள் அவை பொதுச்செயலாளருக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்பி, பதில் மனுத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.